/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
400ல் இருந்து ஒரு ஏக்கரான சாகுபடி பரிதாபமான பழங்குடியினர் விவசாயம்
/
400ல் இருந்து ஒரு ஏக்கரான சாகுபடி பரிதாபமான பழங்குடியினர் விவசாயம்
400ல் இருந்து ஒரு ஏக்கரான சாகுபடி பரிதாபமான பழங்குடியினர் விவசாயம்
400ல் இருந்து ஒரு ஏக்கரான சாகுபடி பரிதாபமான பழங்குடியினர் விவசாயம்
ADDED : நவ 23, 2025 02:23 AM

கூடலுார்: அதிகளவில் பழங்குடியினர் வாழும் புளியாம்பாறை உட்பட சில பகுதிகளில், 400 ஏக்கரில் நடந்த நெல் விவசாயம், தற்போது, ஒரு ஏக்கராக குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலுார், பந்தலுார் சுற்றுப்புற பகுதியில், தேயிலை, காபி, குறுமிளகு, கிராம்பு தவிர, வயல்வெளிகளில் குறுகிய காலத்தில் பயன் தரும் நெல், காய்கறி உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதியில், பருவமழை காலத்தில் பூர்வ குடிகளான மவுண்டான் செட்டி, பழங்குடியின விவசாயிகள், 1,000 ஏக்கரில் பழமையான, 'கருவாளி, சேத்துவாளி, மரநெல், கந்தகசால், கோதண்டன், கொடவெளியன், சிந்தார்மனி, வெலும்பாலை, காடைகண்ணன், ஐ.ஆர்., 8, ஐ.ஆர்., 20, பாரதி' ஆகிய நெல் வகைகளை நடவு செய்து, அறுவடை செய்து வந்தனர்.
அதில், புளியாம்பாறை, அதை ஒட்டிய, 'அட்டி கொல்லி, கரளிகண்டி, மன்னிமூலா, சேப்பட்டி, புலிய வயல், அத்துார், கொள்ளூர், கொட்டக் குன்னி' ஆகிய பகுதிகளில், 400 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் மட்டும் நடந்து வந்தது.
இந்நிலையில், காலநிலை மாற்றம், பாசன நீர் பற்றாக்குறை, தொழிலாளர்கள் குறைவு போன்ற காரணங்களால், பல விவசாயிகள் நெல்லுக்கு மாற்றாக நேந்திரன் வாழை, இஞ்சி விவசாயத்துக்கு மாறினர்.
இதனால், கூடலுார், பந்தலுார் பகுதிகளில், 1,000 ஏக்கரில் பயிர் செய்யப்பட்ட நெல் விவசாயம், 100 ஏக்கருக்கும் குறைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, 400 ஏக்கர் பயிரிடப்பட்ட புளியம்பாறை பகுதியில், நடப்பு ஆண்டு, இரு விவசாயிகள் மட்டும், தலா அரை ஏக்கர் வீதம், ஒரு ஏக்கர் நெல் விவசாயம் மேற்கொண்டுள்ளனர்.
இதனால், மலையின் மண்ணின் மைந்தர்களான பழங்குடி களின், குல தொழில் அழிவின் விளிம்பில் உள்ளது.
புளியம்பாறை நெல் விவசாயி மோகன் கூறுகையில், ''முன்பு, இங்கு உழவு மாடுகளை கொண்டு, விவசாயம் செய்தனர்.
உற்பத்தி செலவு குறைவாக இருந்தது. மாடுகள் அழிந்த நிலையில், வாடகை டிராக்டரில் உழவு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
காட்டு யானைகள் தொல்லையால், நெல் பயிரிடும் பரப்பளவு குறைந்து வருகிறது. இங்கு நெல் கொள்முதல் மையம் இல்லாததால், விற்பனை செய்வதிலும் சிக்கல் உள்ளது,'' என்றார்.

