sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

400 ஆண்டுகள் பழமைவாய்ந்த செயின்ட் டேவிட் கோட்டை

/

400 ஆண்டுகள் பழமைவாய்ந்த செயின்ட் டேவிட் கோட்டை

400 ஆண்டுகள் பழமைவாய்ந்த செயின்ட் டேவிட் கோட்டை

400 ஆண்டுகள் பழமைவாய்ந்த செயின்ட் டேவிட் கோட்டை


ADDED : அக் 30, 2024 05:21 AM

Google News

ADDED : அக் 30, 2024 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : சோழமண்டல கடற்கரைக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பண்டைய ரோமானியர் காலத்திலிருந்தே வணிக தொடர்புகள் இருந்துவந்தன. கி.பி.1295ம் ஆண்டில் மார்க்கோ போலா என்ற வெனிஸ் நகர வர்த்தகப்பயணி, இப்பகுதியில் பயணம் செய்ததை, தனது நுாலில் குறிப்பிட்டுள்ளார். 16-17ம் நுாற்றாண்டுகளில் ஐரோப்பிய நாட்டவர் இந்தியாவோடு வணிகம் செய்ய வந்தபோது சோழ மண்டல கடற்கரையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடுமையாக போட்டியிட்டனர்.

17ம் நுாற்றாண்டின் துவக்கத்தில் டச்சுக்காரர்கள் தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்த செஞ்சி நாயக்கர்களின் அனுமதியைப் பெற்று, 1608ம் ஆண்டு தேவனாம்பட்டினத்தில் ஒரு கோட்டையைக் கட்டினர்.

அப்போது சோழமண்டல கடற்கரை வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்திய போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள் நுழைவை தடுக்க விஜயநகர பேரரசின் முதலாம் வெங்கடராயரிடம் அழுத்தம் கொடுத்ததால், செஞ்சி நாயக்கர் அனுமதியை திரும்ப பெற்றனர். கோட்டை, செஞ்சி நாயக்கர்கள் நியமனம் செய்த வணிகர்களிடம் விடப்பட்டு, வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. சந்தனம், கிராம்பு, ஜாதிக்காய், பச்சை வெல்வெட், பீங்கான், தாமிரம் மற்றும் பித்தளை ஆகியவற்றை வணிகம் செய்யும் முக்கிய பகுதியாக இக்கோட்டை மாறியது.

கடந்த 1677ல் செஞ்சிக்கோட்டையை சிவாஜி கைப்பற்றிய பின்னர் இக்கோட்டையும் மராத்தியரின் கைக்கு வந்தது.

பின்னர் 1684ம் ஆண்டு மராத்திய மன்னர் சம்பாஜி, ஆங்கிலேயருக்கு இவ்விடத்தில் ஒரு கோட்டை கட்டிக்கொள்ள அனுமதி கொடுத்தார்.

1690ல் முகலாயப்படையால் செஞ்சி கோட்டை முற்றுகையிட்டபோது, அப்போது செஞ்சியின் ஆட்சியாளராக இருந்த சிவாஜியின் மகன் ராஜாராம் சத்ரபதி, தேவனாம்பட்டினம் கோட்டையை ஐரோப்பியர்களிடம் ஏலம் விட்டு விற்றுவிட எண்ணினார்.

அதில் ஆங்கிலேயர், டச்சு மற்றும் பிரெஞ்சுகாரர்களை ஏலத்தில் வென்று கோட்டையை வாங்கினர்.

அப்போது இந்த கோட்டையும், அதனைச்சுற்றி மராத்தியர்களின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளும் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன.

இக்கோட்டைக்கு ஆளுநரான எலிகுயேல் என்பவர், வேல்ஸ் பகுதியின் புகழ்மிக்க கிறிஸ்துவ துறவியான புனிதர் டேவிட் என்பவரின் பெயரை கடலுாரின் கோட்டைக்கு சூட்டினார். பின்னர் 1693, 1698, 1702, 1725, 1740, 1745 ஆகிய ஆண்டுகளில் மேலும் மேலும் படிப்படியாக கோட்டை விரிவுபடுத்தப்பட்டதோடு வலுப்படுத்தப்பட்டு வந்தது. 1746ம் ஆண்டில், செயின்ட் டேவிட் கோட்டை தென்னிந்தியாவிற்கான ஆங்கிலேயரின் தலைமையகமாக மாறியது.

மேலும் பிரெஞ்சு தளபதி டூப்ளேயின் கீழ் பிரெஞ்சுப்படைகளின் தாக்குதல்கள், ராபர்ட் கிளைவால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. 1756ல் ராபர்ட் கிளைவ் கோட்டையின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1758ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் அதை கைப்பற்றினர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஆங்கிலேயர் மீண்டும் கோட்டையை கைப்பற்றினர்.

1782ல் பிரேஞ்சுக்காரர்கள் மீண்டும் கோட்டையை கைப்பற்ற, 1785ம் ஆண்டு இறுதியாக ஆங்கிலேயர் கோட்டையை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அடுத்தடுத்து நடந்த தாக்குதல்களால் சேதமடைந்த கோட்டையை ஆங்கிலேயர் சீரமைத்தற்கான கல்வெட்டு, கோட்டையின் வாயிலில் இன்றளவும் உள்ளது. அதன்பின், செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயரின் தலைமையகமாக மாறியதால், செயின்ட் டேவிட் கோட்டை முக்கியத்துவம் இழந்து போனது.

கட்டப்பட்டு 400ஆண்டுகளுக்குப் பின்னரும், பல்வேறு போர் தாக்குதல்களை சந்தித்தும் இன்றளவும் நம் கண்ணுக்கு பொக்கிஷமாய் காட்சியளிக்கும் வரலாற்று நினைவு சின்னத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பீரங்கி குண்டு கிராமங்கள்

1690ல் மராத்திய மன்னர் ராஜாராம் சத்திரபதியிடம் இருந்து பிரிட்டிஷார் கோட்டையை ஏலத்தில் வாங்கிய பின் கிரயம் செய்யப்படுகிறது. அதன்படி, கோட்டைக்குச் சொந்தமான பகுதியை முடிவு செய்ய,கோட்டையிலிருந்து அனைத்துத் திசைகளிலும், வானை நோக்கி பீரங்கி குண்டுகள் சுடப்பட்டு, அந்த பீரங்கிக்குண்டுகள் விழுந்த இடம் வரையிலான பகுதிகள் கோட்டைக்குச் சொந்தமான பகுதிகளாக கையகப்படுத்தப்பட்டது. அதன்படி, இக்கோட்டையிலிருந்து 6 முதல் 7 கி.மீ வரையிலான சுற்றளவுள்ள பகுதிகள்ஆங்கிலேயர் வசமாயின. இன்றும் அந்தக் கிராமங்கள் மற்றும் பகுதிகள் 'குண்டு உப்பலவாடி', மற்றும் 'குண்டுசாலை' என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.கோட்டையைச்சுற்றி 12 இடங்களில் வணிகம் மற்றும் போக்குவரத்திற்காகவும் பயன்படுத்தப்பட்ட சுரங்கப்பாதைகள் இன்றும் வரை உள்ளது.








      Dinamalar
      Follow us