/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின்னொளியில் ஜொலிக்கும் 'மாதிரி' பெரிய கோவில்
/
மின்னொளியில் ஜொலிக்கும் 'மாதிரி' பெரிய கோவில்
ADDED : நவ 10, 2025 03:32 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தின் அடையாளமாக திகழும் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாதிரி வடிவமைப்பு, பாலக்கரையில் வைக்கப்பட்டுள்ளது பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
விருத்தாசலம் நகரத்திற்கு வேப்பூர், மங்கலம்பேட்டை, கம்மாபுரம், திட்டக்குடி, பெண்ணாடம், உளுந்துார்பேட்டை, மந்தாரக்குப்பம், நெய்வேலி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கும், மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கும் தினசரி வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், 'ஹார்ட் ஆப் சிட்டி' பகுதியாக பாலக்கரை உள்ளது. இங்கிருந்து தான் பல்வேறு நகரங்களுக்கு சாலை பிரிகிறது.
விருத்தாசலம் பண்டைய காலத்தில் திருமுதுகுன்றம் என அழைக்கப்பட்டது. அப்போது கண்டராதித்த சோழனால், இந்த நகரத்தில் பழமலைநாதர் (விருத்தகிரீஸ்வரர்) கோவில் கட்டப்பட்டது.
இந்த கோவில், 5 கோபுரம், 5 கொடிமரம், 5 நந்தி என்ற சிறப்புகளை கொண்டது. மேலும், 2 ஆயிரம் ஆண்டு பழமையான கோவில் என்பதால், பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் தினசரி வந்து, சுவாமியை வழிபட்டுச் செல்கின்றனர்.
இந்நிலையில், நகராட்சி சார்பில், பாலக்கரையில் உள்ள அசோக் பில்லரில், விருத்தகிரீஸ்வரர் கோவில் சிறப்பை போற்றும் வகையில், குன்றுகளால் ஆகிய சுற்றுச்சுவருடன், 5 கோபுரங்கள் அடங்கிய கோவில் வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
அதில், திருமுதுகுன்றம் என பழைய ஊர் பெயர் மற்றும் 'செம்மொழியான தமிழ்மொழி' என எழுதப்பட்டுள்ளது.
இதனால் ரவுண்டானா இரவு நேரங்களில் மின்னொளியில் ஜொலிப்பதால், அதை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதனை ரசித்து, தங்களது மொபைல் போனில் படம் எடுத்துச் செல்கின்றனர்.

