/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனைவி கொலை வழக்கில் தலைமறைவான கணவர் கைது
/
மனைவி கொலை வழக்கில் தலைமறைவான கணவர் கைது
ADDED : அக் 26, 2025 03:19 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே மனைவியை அடித்து கொலை செய்த வழக்கில், தலைமறைவான கணவரை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.
அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள அழகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 46; இவரது மனைவி சரளா, 39; இருவரும், மனைவியின் சொந்த ஊரான சோழத்தரம் அருகே உள்ள பாளையங்கோட்டை வடக்குப்பாளையத்தில் வசித்து வந்தனர்.
குழந்தை இல்லாததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி, இரவு குடிபோதையில் இருந்த ஆறுமுகம் சரளாவை அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.
சோழத்தரம் போலீசார் வழக்கு பதிந்து, ஆறுமுகத்தை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஆறுமுகம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தலைமறைவானார்.
சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., விஜிகுமார் உத்தரவின்பேரில், சப் இன்ஸ்பெக்டர் செல்வபாண்டியன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜா, ஏட்டுக்கள் விஜயகுமார், ரஜினி ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் ஆறுமுகத்தை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அழகாபுரத்திற்கு ஆறுமுகம் வந்துள்ளதாக தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் ஆறுமுகத்தை பிடித்து சோழத்தரம் போலீசில் ஒப்படைத்தனர். சோழத்தரம் போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

