/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசுப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை!
/
அரசுப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை!
ADDED : மார் 13, 2024 06:45 AM

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1,431 மாணவ, மாணவிகள் ஒன்றாம் வகுப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, விலையில்லா சைக்கிள், பாட புத்தகங்கள் என பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்த ஸ்மார்ட் வகுப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜூன் மாதம் முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். ஆனால், நடப்பு கல்வியாண்டில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் இம்மாதம் துவக்கத்திலேயே மாணவர் சேர்க்கையை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.
அதன்பேரில், தமிழகம் முழுதும் கல்வி மாவட்டங்கள் வாரியாக மாணவர் சேர்க்கை துவங்கி நடந்து வருகிறது. கடலுார் மாவட்டத்தில் கடலுார், விருத்தாசலம் என, 2 கல்வி மாவட்டங்கள் உள்ளது. மாவட்டம் முழுதும் 1,185 அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளது.
கடந்த 1ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை விடுமுறை நாளான ஞாயிற்று கிழமையை தவிர்த்து 9 நாட்களில் 689 மாணவர்கள், 742 மாணவிகள் என மொத்தம் 1,431 பேர் ஒன்றாம் வகுப்பில் சேர விண்ணப்பம் அளித்துள்ளனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நடப்பு கல்வியாண்டில் மாவட்டத்தில் 5 வயதுடைய குழந்தைகளை அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் கற்றல் திறன், அடிப்படை வசதிகள், அரசின் நலத்திட்டங்கள், கல்வி உதவித் தொகை குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு பகுதியாக சென்று மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகிறது. வரும் நாட்களிலும் தீவிர விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்' என்றார்.

