/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை - திட்டக்குடி மார்க்கத்தில் கூடுதல் பஸ்... தேவை; மாணவர்களின் ஆபத்தான பயணம் தவிர்க்கப்படுமா?
/
விருதை - திட்டக்குடி மார்க்கத்தில் கூடுதல் பஸ்... தேவை; மாணவர்களின் ஆபத்தான பயணம் தவிர்க்கப்படுமா?
விருதை - திட்டக்குடி மார்க்கத்தில் கூடுதல் பஸ்... தேவை; மாணவர்களின் ஆபத்தான பயணம் தவிர்க்கப்படுமா?
விருதை - திட்டக்குடி மார்க்கத்தில் கூடுதல் பஸ்... தேவை; மாணவர்களின் ஆபத்தான பயணம் தவிர்க்கப்படுமா?
ADDED : ஆக 22, 2025 10:15 PM

பெண்ணாடம்: விருத்தாசலம் - திட்டக்குடி மார்க்கத்தில் பள்ளி நேரங்களில் கூடுதல் அரசு டவுன் பஸ்களை இயக்கி, மாணவர்களை ஆபத்தான பயணத்தில் இருந்து பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள இறையூர், ஆவினங்குடி, திட்டக்குடி, கருவேப்பிலங்குறிச்சி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிகளவில் உள்ளன.
இப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு பெரும்பாலான மாணவ, மாணவிகள் பஸ்களில் சென்று வருகின்றனர்.
பள்ளி துவங்கும் போது காலை வேளையிலும், பள்ளி முடியும் போது மாலை வேளையிலும் மாணவ, மாணவிகள் காத்திருக்கும் பஸ் நிறுத்தங்களில் அரசு டவுன் பஸ்கள் நிற்காமல் செல்கின்றன.
அதில் ஓரிரு பஸ்கள் சற்று துாரம் சென்று நின்று செல்வதால் அனைத்து மாணவர்களும் ஓடிச் சென்று, முண்டியடித்து ஏறி பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்கின்றனர்.
மேலும், பள்ளி நேரமான காலை மற்றும் மாலை வேளைகளில் போதிய கூடுதல் அரசு டவுன் பஸ்கள் இல்லாததால் தனியார் பஸ்களில் டிக்கெட் எடுத்து பயணம் மேற்கொள்கின்றனர்.
அதிலும் பயணிகள் கூட்டம் அதிகளவில் உள்ளதால் மாணவர்கள் ஆபத்தான முறையில் படியில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் மாணவர்கள் தவறி விழுந்து காயமடைவதுடன் உயிரிழப்பு ஏற்படும் சூழலும் உள்ளது.
இதேபோன்று, மாவட்டத்தின் பல பகுதிகளில் பள்ளி நேரங்களில் போதிய அரசு டவுன் பஸ் இல்லாததால் பள்ளி மாணவர்கள் படியில் ஆபத்தான பயணம் மேற்கொள்வதுடன், தவறி கீழே விழுந்து காயமடைவது தொடர்கிறது.
எனவே, மாணவர்களை விபத்துகளில் இருந்து பாதுகாக்க விருத்தாசலம் - திட்டக்குடி மார்க்கத்தில் பள்ளி நேரங்களில் மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், 'விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் பள்ளி துவங்கும்போதும் முடியும்போதும் போதிய அரசு டவுன் பஸ்கள் செல்வதில்லை. ஆனால் மற்ற நேரங்களில் காலியாகவே அதிகளவில் பஸ்கள் செல்கின்றன.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இச்சாலை பகுதியில் திடீர் ஆய்வு செய்து மாணவர்களுக்கு போதிய பஸ் வசதிகள் ஏற்படுத்தினால் மட்டுமே மாணவர்கள் படியில் தொங்காமல் பாதுகாப்பான பயணம் செய்ய முடியும்' என்றார்.