/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒப்புக்கென பள்ளி விளையாட்டு மைதானங்கள்
/
ஒப்புக்கென பள்ளி விளையாட்டு மைதானங்கள்
ADDED : ஜன 29, 2025 11:17 PM
விருத்தாசலம்: அரசு பள்ளிகளில் பாரம்பரிய விளையாட்டுகளை மேம்படுத்தும் வகையில் கலைத்திருவிழா, விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்கப்படுத்த விளையாட்டு திருவிழா நடத்தப்படுகிறது. ஆனால் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் முறையாக பராமரிக்கப்படுதில்லை.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மைதானங்கள் பராமரிப்பின்றி முட்புதர் மண்டிக் கிடக்கிறது. கற்கள், முட்கள் கிடப்பதால் தடகளப் போட்டிகளில் ஆர்வமுள்ள மாணவர்களும் தயங்கும் அவலம் உள்ளது. சிறு மழைக்கு கூட வாரக்கணக்கில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதுபோன்ற குளறுபடிகளை களைந்து, பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களை புதுப்பிக்க வேண்டும். தடகளம், கால்பந்து, இறகுபந்து, எறிபந்து, ஈட்டி எறிதல் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மாணவர்களுக்கு முறையாக பயிற்சி தர வேண்டும்.
விளையாட்டுப் போட்டிகளில் பெறும் சான்றிதழ்கள், சிறப்பு மதிப்பெண்கள் அவர்களின் கல்லுாரி கல்விக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை மாணவர்கள் மனதில் ஆழமாக விதைக்க வேண்டும். அப்போதுதான், அரசுப் பள்ளிகளில் இருந்து அதிகளவு மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பார்கள்.
அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் ஒட்டுமொத்த பயிற்சியும் தரப்படுகிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் கராத்தே, நீச்சல், இசை, குதிரை ஏற்றம் உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து, தனித்தனி பயிற்சியாளர்களை நியமித்து பயிற்சி தரப்படுகிறது.
எனவே, தனியார் பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிகளுக்கு தரப்படும் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் புரிய வைக்க வேண்டும். இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற ஏழை மாணவர்களும் மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்று, சாதனையாளர்களாக மாற வேண்டும்.
இதற்கு முன்னோட்டமாக மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி விளையாட்டு மைதானங்களை புதுப்பித்து, கட்டமைப்பு வசதிகளை தன்னிறைவாக மாற்றித் தர வேண்டும். துணை முதல்வர் உதயநிதி அரசுப் பள்ளி மாணவர்களின் நலனில் தனிக்கவனம் செலுத்திட பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.