/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனைத்து பிரச்னைகளும் பேசி முடிக்கிறாங்க...
/
அனைத்து பிரச்னைகளும் பேசி முடிக்கிறாங்க...
ADDED : ஜன 31, 2024 02:15 AM
பஞ்சாயத்து கூடமான போலீஸ் நிலையம்
பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், மக்களின் பிரச்னைகளை தீர்க்கவும் போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. ஆனால், கடலுார் மாவட்ட தலைநகர் அருகே பண்ருட்டி உட்கோட்டத்துக்குட்பட்ட போலீஸ் நிலையம் ஒன்றில், முழு நேர கட்டப்பஞ்சாயத்து கூடமாக செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள காவல்துறை அதிகாரி, தினமும் பல பஞ்சாயத்துக்களை தினமும் சர்வ சாதாரணமாக முடித்து, அதற்கான சன்மானத்தை கராராக பெற்றுவிடுகிறாராம்.
சமீபத்தில், இந்த போலீஸ் நிலைய எல்லையில், கடலுாரை சேர்ந்தவரின் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்தவரிடம் கடந்த சில ஆண்டுகளாக குத்தகைக்கு விட்டிருந்தார். தற்போது நிலத்தை விற்க இருப்பதால் நிலத்தை ஒப்படைக்கும்படி குத்தகைதாரரிடம் கூறியுள்ளார். இதற்கு அவர் சம்மதிக்காததால் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
சம்மந்தப்பட்ட அதிகாரி, பிரச்னையை கையில் எடுத்துக்கொண்டு இரு தரப்பையும் வரவழைத்து பேசி முடித்தார். நிலத்தின் உரிமையாளர், குத்தகைதாரருக்கு பல லட்சம் தர வேண்டுமென முடிவாகியது.வேறு வழியின்றி நில உரிமையாளர் கேட்ட தொகையை கொடுத்து, நிலத்தை பெற்றார்.
அதேபோல், வீட்டுமனை அமைத்தவரிடம் கழிவுநீர் கால்வாயை சேதபடுத்தியதாக சில கவுன்சிலர்கள் தகராறு செய்தனர். உடனே இருதரப்பினரையும் வரவழைத்த போலீஸ் அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினார்.அதிலும் பணம் விளையாடியது. வெளியே சட்டவிரோதமாக நடக்கும் கட்டபஞ்சாயத்துகள் போலீஸ் நிலையத்திலேயே சட்டபூர்வமாக நடப்பதாக அரசியல் கட்சியினர் முதல் சாமானிய பொதுமக்கள் வரையில் புலம்பி வருகின்றனர். நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், போலீஸ் நிலையம் வருவோர், கையில் காசு இருந்தால்தான் வேலை நடக்கும் என்ற நிலை இங்கு உள்ளது.