/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு ஏற்பாடு: மாவட்டத்தில் கல்வித்துறை தீவிர நடவடிக்கை
/
தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு ஏற்பாடு: மாவட்டத்தில் கல்வித்துறை தீவிர நடவடிக்கை
தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு ஏற்பாடு: மாவட்டத்தில் கல்வித்துறை தீவிர நடவடிக்கை
தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு ஏற்பாடு: மாவட்டத்தில் கல்வித்துறை தீவிர நடவடிக்கை
ADDED : மே 27, 2024 05:55 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
கடலுார் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 246 அரசுப் பள்ளிகள், 46 அரசு உதவிப் பெறும் பள்ளிகள், 148 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 440 பள்ளிகளில் இருந்து 16,908 மாணவர்கள், 15,661 மாணவிகள் என மொத்தம் 32,569 பேர் எழுதினர்.
இதில், 15,230 மாணவர்கள், 14,939 மாணவிகள் என மொத்தம் 30,169 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்வில் 2,300 பேர் தேர்ச்சி பெறவில்லை.
கடந்த 2023ம் ஆண்டு பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 88.49 சதவீதம் பெற்று மாநில அளவில் 33வது இடத்திற்கு தள்ளப்பட்ட கடலுார் மாவட்டம் இந்தாண்டு கலெக்டர் அருண் தம்புராஜ் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக மாநில அளவில் 19வது இடத்திற்கு முன்னேறியது.
இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி முதல் துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 117 அரசுப் பள்ளிகள், 30 அரசு உதவிப் பெறும் பள்ளிகள், 99 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 246 பள்ளிகளில் இருந்து 13,820 மாணவர்கள், 14,698 மாணவிகள் என மொத்தம் 28,518 பேர் தேர்வு எழுதினர்.
இவர்களில் 12,758 மாணவர்கள், 14,153 மாணவிகள் என மொத்தம், 26,911 தேர்ச்சி பெற்றனர். 1,607 பேர் தேர்ச்சி பெறவில்லை.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மாவட்டம் வாரியாக அந்தந்த பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த வேண்டுமென, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி, கடலுார் மாவட்டத்திலும் சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி கூறுகையில், 'மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதற்காக அரசுப் பள்ளிகளுக்கு குறைந்தபட்ச கற்றல் கையேடு, வாராந்திர தேர்வு வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளன.
வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வாராந்திர தேர்வு நடக்கிறது. பயிற்சி வகுப்பின் போது, மாணவர்களின் வருகைப் பதிவு, வாராந்திர தேர்வு குறித்த மதிப்பெண் பட்டியல், கல்வி மேலாண்மை தகவல் (எமிஸ்) என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது' என்றார்.

