/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலி நற்சான்று வழங்கிய போலீஸ் ஏட்டு கைது
/
போலி நற்சான்று வழங்கிய போலீஸ் ஏட்டு கைது
ADDED : அக் 14, 2024 04:27 AM
மந்தாரக்குப்பம்: கடலுார் மாவட்டம், ஊமங்கலம் சமுட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன். என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் மீது பணமோசடி, என்.எல்.சி.,யில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் பறித்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஊமங்கலம் காவல் நிலையத்தில் உள்ளது.
கடந்த வாரம் என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் கேட் பாஸ் விண்ணப்பிக்க, தன் மீது வழக்கு ஒன்றும் இல்லை என, ஊமங்கலம் போலீசில் தடையில்லா சான்று கேட்டு மனு அளித்தார். அப்போது பணியில் இருந்த ஏட்டு சுதாகர், அன்பழகன் மீது வழக்குகள் ஏதும் இல்லை என, நற்சான்று வழங்கியுள்ளார்.
என்.எல்.சி., நிர்வாகம் விசாரணை மேற்கொண்டதில், அன்பழகனுக்கு உண்மைக்கு புறம்பான சான்றிதழ் அளித்தது தெரியவந்தது. கடலுார் எஸ்.பி.,யிடம் என்.எல்.சி., நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
விசாரணையில், சுதாகர், மோசடியாக அன்பழகனுக்கு நற்சான்றிதழ் வழங்கியது தெரியவந்ததையடுத்து, சுதாகரை ஊமங்கலம் போலீசார் கைது செய்தனர். வழக்கில் ஊமங்கலம் போலீசில் பணிபுரியும் எழுத்தர் ஜோசப், தனிப்பிரிவு போலீஸ்காரர் சங்குபாலன் ஆகியோரை 'சஸ்பெண்ட்' செய்து, எஸ்.பி., ராஜாராம் உத்தரவிட்டார்.