/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் சட்டசபை மதிப்பீட்டுக் குழுவினர்... ஆய்வு; மருத்துவக்கல்லூரி குறைபாடு தீர்க்கப்படும் என உறுதி
/
மாவட்டத்தில் சட்டசபை மதிப்பீட்டுக் குழுவினர்... ஆய்வு; மருத்துவக்கல்லூரி குறைபாடு தீர்க்கப்படும் என உறுதி
மாவட்டத்தில் சட்டசபை மதிப்பீட்டுக் குழுவினர்... ஆய்வு; மருத்துவக்கல்லூரி குறைபாடு தீர்க்கப்படும் என உறுதி
மாவட்டத்தில் சட்டசபை மதிப்பீட்டுக் குழுவினர்... ஆய்வு; மருத்துவக்கல்லூரி குறைபாடு தீர்க்கப்படும் என உறுதி
ADDED : ஜன 06, 2024 06:40 AM

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் ஆய்வு செய்த சட்டசபை மதிப்பீட்டுக் குழுவினர் பல்வேறு இடங்களில் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததைப் பார்த்து அதிகாரிகளை கடிந்து கொண்டனர். சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி குறைபாடுகளை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
சட்டசபை மதிப்பீட்டுக் குழு தலைவர் கும்பகோணம் தொகுதி எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையில், உறுப்பினர்கள் திருத்தணி சந்திரன், காட்டுமன்னார்கோவில் சிந்தனைச்செல்வன், மயிலம் சிவக்குமார், ஆரணி ராமச்சந்திரன், எக்மோர் பரந்தாமன் ஆகியோர் கடலுார் மாவட்டத்தில் நேற்று ஆய்வு செய்தனர்.
கடலுார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், ஸ்மார்ட் வகுப்பறையை ஆய்வு செய்தனர். அப்போது, பள்ளி வளாகத்தில் புதர் மண்டியும், குப்பை மேடாகவும் இருந்தது. இதனைப் பார்த்த குழு தலைவர் அன்பழகன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களை அழைத்து கடிந்து கொண்டார். மேலும் உடனடியாக துப்புரவு பணி நடைபெற வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மற்றும் துப்புரவு பணியாளர்களை கொண்டு புதர்கள், குப்பைகள் அகற்றும் பணியை மேற்கொண்டனர். மேலும், இந்த வளாகத்தில் சேதமடைந்துள்ள பள்ளி வகுப்பறை கட்டடத்தில் மாணவர்கள் செல்லாத அளவிற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கயிறு கட்டினர்.
தொடர்ந்து, 5.11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் செம்மண்டலம் ஆதி திராவிடர் கல்லுாரி மாணவர் விடுதி கட்டுமானப் பணியை ஆய்வு செய்தனர். பின், தாழங்குடா மீனவர் கிராமத்திற்கு சென்று அங்கு கட்டப்பட்டு வரும் மீன் இறங்கு தளத்தை பார்வையிட்டனர்.
சட்டசபை முதன்மைச் செயலர் சீனிவாசன், கலெக்டர் அருண் தம்புராஜ், எம்.எல்.ஏ.,க்கள் ஐயப்பன், சபா ராஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து, நெல்லிக்குப்பம் விஸ்வநாதபுரத்தில் பெண்ணையாற்றின் குறுக்கே கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 29 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து முறையாக பராமரிக்க நீர்வளத் துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர். செயற்பொறியாளர் அருணகிரி, உதவி செயற் பொறியாளர் ரஜினிகாந்த் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
சிதம்பரம்
சிதம்பரத்தில் உள்ள மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மைய கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து மருத்துவமனை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.
அதனைத் தொடர்ந்து, மதிப்பீட்டுக் குழு தலைவர் அன்பழகன் கூறுகையில், 'மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டோம்.
பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த மருத்துவக்கல்லுாரியை அரசு ஏற்றபின், ஏற்பட்டுள்ள குறைபாடுகளை தெரிவித்துள்ளனர். இது குறித்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இக்கட்டடத்தில் 60 படுக்கைகள் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சைப்பிரிவு செயல்பட உள்ளது. 5 மாதங்களில் திறக்கப்படும். மேலும் மருத்துவக் கல்லுாரியில் உள்ள பழைய கட்டடங்களை பராமரிக்க, சுமார் 50 கோடி நிதி கேட்டிருக்கின்றனர். ஆய்வு செய்து துறை அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும்.
சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மி ராணி, தாசில்தார் செல்வகுமார், அண்ணாமலை பல்கலைழக பதிவாளர் சிங்காரவேலு, பொதுப்பணி துறை செயற் பொறியாளர் காந்தரூபன், மருத்துவக் கல்லுாரி முதல்வர் திருப்பதி, கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.