மாவட்டத்தில் கம்பு சாகுபடி பரப்பளவு குறைந்தது: பருவமழை பொய்தததால் விலை அதிகரிப்பு
மாவட்டத்தில் கம்பு சாகுபடி பரப்பளவு குறைந்தது: பருவமழை பொய்தததால் விலை அதிகரிப்பு
UPDATED : ஆக 03, 2026 05:14 PM
ADDED : ஆக 03, 2026 05:13 PM

விருத்தாசலம்: கடலுார் மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் கம்பு சாகுபடி பரப்பளவு குறைந்து, விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழர்களின் சிறுதானிய உணவு வகைகளில் முதலிடத்தில் இருப்பது கம்பு. வறட்சியை தாங்கி வளரும் பயிரான கம்பு, மனிதர்களுக்கு மட்டுமன்றி, கால்நடைகளுக்கும் தீவனமாகவும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மானாவாரி பயிரான கம்பு தமிழகத்தில் ஆண்டுதோறும் 1.45 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகிறது. இதன் மூலம், 1.77 லட்சம் டன் கம்பு உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
தமிழகத்தில், கம்பு உற்பத்தியில் விழுப்புரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. கடலுார் மாவட்டத்தில், நெல், கரும்பு பயிர்களுடன் கம்பு முக்கிய பயிராக பயிரிடப்பட்டு வந்தது. குறிப்பாக, குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் 5,000 ஏக்கரிலும், விருத்தாசலம் வட்டாரத்தில் 1,000 ஏக்கர் பரப்பளவில் கம்பு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. அதுவும், இம்மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் கம்பு, கோழி தீவினத்திற்கு பெயர் பெற்றது.
பருவமழையை நம்பியே இப்பயிர் சாகுபடி செய்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக மழை பொய்த்து போனதால், கம்பு சாகுபடி பரப்பு வெகுவாக சரிந்துள்ளது. ஆண்டுதோறும் 5000 ஏக்கரில் கம்பு பயிரிடப்படும் குறிஞ்சிப்பாடியில் இந்தாண்டு 200 ஏக்கர் மட்டுமே கம்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, 1000 ஏக்கர் பரபரப்பளவில் நடைபெற்று வந்த கம்பு சாகுபடி இந்தாண்டு வெறும் 30 ஏக்கர் பரபரப்ளவில் மட்டுமே கம்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், கம்பு சாகுபடி பரப்பளவு பலமடங்கு குறைந்துள்ளதால், இந்தாண்டு கம்பின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் மூட்டைகள் வரை கம்பு விற்பனைக்கு வந்தன. ஆனால், தற்போது சாகுபடி பரப்பு குறைந்ததால், கமிட்டிக்கு கம்பு வரத்து சொற்ப அளவிலேயே உள்ளது.
சாகுபடி பரப்பளவு குறைந்து வருவதால், வருங்காலத்தில் சிறுதானிய பயிர்களில் கம்பு பயிர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், கோழி தீவினங்களின் விலை உயரும். அதன்மூலம், கறிக்கோழிகளின் விலையும் உயரும் நிலை உருவாகி உள்ளது.
விவசாயி பேட்டி
இதுகுறித்து, குறிஞ்சிப்பாடி விவசாயி குமரகுரு கூறியதாவது:
'மாவட்டத்தில் விருத்தாசலம் அடுத்த சாத்தமங்கலம் துவங்கி, குறிஞ்சிப்பாடி, கடலுார் வரை உளுந்து, வேர்க்கடலை, எள் அறுவடைக்கு பின், தென்மேற்கு பருவமழையின்போது கம்பு விதைப்பு நடப்பது வழக்கம். கடந்தாண்டுகளில் குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் 5 ஆயிரம் ஏக்கரும், விருத்தாசலம் வட்டாரத்தில் 1,000 ஏக்கரும் கம்பு சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், பருவமழை பெய்யாத காரணத்தால் நடப்பாண்டில் குறிஞ்சிப்பாடியில் 200 ஏக்கரும், விருத்தாசலத்தில் 30 ஏக்கர் மட்டுமே கம்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதுவும் நல்ல முறையில் முளைக்கவில்லை. விதைப்புக்கு முன் ஒரு மழை, விதைப்புக்கு பின் இருமழை பெய்தால் மட்டுமே கம்பு பயிர் தப்பிக்கும். ஆனால், மழையே பெய்யாது ஏமாற்றியதால், கம்பு சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகி உள்ளனர்.
