ADDED : அக் 04, 2025 07:26 AM

நெய்வேலி : என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளிக்கு, வணிகம், நிலைத்தன்மை மற்றும் சமூக நலனுக்கான தலைமைப் பண்பு ஆகிய தனிநபர் பிரிவின் கீழ், 'மகாத்மா விருது 2025' வழங்கப்பட்டது.
புதுடில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில், புதுச்சேரி முன்னாள் கவர்னர் கிரண்பேடி என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளிக்கு மகாத்மா விருது - 2025 வழங்கி கவுரவித்தார். தொலைநோக்குத் தலைமைப் பண்புடன் என்.எல்.சி., நிறுவனம், இந்தியாவை நிலைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி வழிநடத்தியது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் விரிவாக்கம் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான சுரங்க நடைமுறைகள் மீதான அர்ப்பணிப்பு. சுரங்கப் பணிகள் மற்றும் திட்டங்களால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் போன்ற பகுதிகளில், சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பை உருவாக்குதல்.
பெண்களுக்கு உரிய அதிகாரம் அளித்தல் போன்ற முக்கிய சமூகப் பணிகளைத் தொடங்கியது போன்ற அம்சங்களின் அடிப்படையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதினை பெற்ற பின் அவர் கூறுகையில், 'இந்த விருது, இடைவிடாமல் உழைத்த என்.எல்.சி., இந்தியா குழுமத்தின் முயற்சிக்கு உரித்தானது. காந்தியின் லட்சியங்களால் உந்தப்பட்டு, பசுமையான, நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தை உருவாக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.
இந்த விருது, தேசத்தின் எரிசக்திப் பாதுகாப்புக்குப் பங்களிக்கும் அதே வேளையில், சமூகத்திற்குத் தொடர்ந்து சேவை செய்ய எங்களை ஊக்குவிக்கிறது' என்றார்.