/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேர்க்கடலை செயல் விளக்க திடலில் பாபா அணு ஆராய்ச்சி விஞ்ஞானி ஆய்வு
/
வேர்க்கடலை செயல் விளக்க திடலில் பாபா அணு ஆராய்ச்சி விஞ்ஞானி ஆய்வு
வேர்க்கடலை செயல் விளக்க திடலில் பாபா அணு ஆராய்ச்சி விஞ்ஞானி ஆய்வு
வேர்க்கடலை செயல் விளக்க திடலில் பாபா அணு ஆராய்ச்சி விஞ்ஞானி ஆய்வு
ADDED : ஆக 22, 2025 10:23 PM

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே வேர்க்கடலை செயல்விளக்கத் திடலில் பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி டேனியல் செல்லப்பா ஆய்வு செய்து, மகசூல் அதிகரிப்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேர்க்கடலை செயல் விளக்கத் திடல் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திடலை மும்பை பாபா அணுசக்தி ஆராய்ச்சி மைய அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தலைமையில், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய வேளாண் விஞ்ஞானிகள் உமா, காயத்ரி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, செயல்விளக்கத் திடலில் சாகுபடி செய்துள்ள வி.ஆர்.ஐ., 10 ரகத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து அணு விஞ்ஞானியிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது, வேர்க்கடலை திடலில் மஞ்சள் நோய் தாக்கம் இருப்பதை கண்டறிந்த டேனியல் செல்லப்பா, கதிரியக்கம் மூலம் பூச்சிநோய்களைக் கண்டறிந்து, அவற்றை கட்டுப்படுத்தும் செயல்முறைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
பின், விவசாயிகளுக்கு கதிரியக்கம் மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கம் அளித்தார்.
மாவட்ட வேளாண் துணை இயக்குநர் விஜயராகவன், வேளாண் உதவி இயக்குநர்கள் சுரேஷ், வெங்கடேசன், வேளாண் அலுவலர் சுகன்யா, துணை அலுவலர் வெங்கடேசன், உதவி விதை அலுவலர்கள் இளந்திரையன், இளவரசன் மற்றும் செயல் விளக்கத் திடல் விவசாயிகள் உடனிருந்தனர்.
தொடர்ந்து, விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அணுசக்தி கதிர்கள், காமா கதிர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி ஐந்து விதமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மணிலா ரகங்கள் உருவாக்கப்பட்டதை பார்வையிட்டனர்.
மேலும், காமா கதிர்கள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பயிர்கள் நல்ல முறையில் வளர்ச்சி பெற்று, மகசூல் அதிகரிக்குமா என்பதையும் அணு விஞ்ஞானி ஆய்வு செய்தார். தொடர்ந்து கம்மாபுரம் அடுத்த கோ.மாவிடந்தல் கிராமத்தில் செயல்விளக்கத் திடலை ஆய்வு செய்தனர்.