/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேலத்தில் காணாமல் போன பைக் 3 ஆண்டிற்கு பின் பெண்ணாடத்தில் மீட்பு
/
சேலத்தில் காணாமல் போன பைக் 3 ஆண்டிற்கு பின் பெண்ணாடத்தில் மீட்பு
சேலத்தில் காணாமல் போன பைக் 3 ஆண்டிற்கு பின் பெண்ணாடத்தில் மீட்பு
சேலத்தில் காணாமல் போன பைக் 3 ஆண்டிற்கு பின் பெண்ணாடத்தில் மீட்பு
ADDED : மார் 19, 2025 04:21 AM

பெண்ணாடம் : சேலத்தில் காணாமல் போன பைக்கை மூன்றாண்டுகளுக்கு பின் வாகன சோதனையில் 'இ - பீட்' செயலி மூலம் பெண்ணாடம் போலீசார் மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
கடலுார் மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார், போலீசார் இரவு நேர ரோந்தின் போது, 'இ - பீட்' செயலி மூலம் வாகன சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.
அதன்படி, பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த டி.என். 28 - பி.ஒய். 3911 பதிவெண் கொண்ட பைக்கை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர்.
அப்போது, பைக்கை ஓட்டி வந்தவர் பைக்கை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றார். பைக்கை பறிமுதல் செய்த போலீசார் 'இ -பீட்' செயலி மூலம் பைக் பதிவெண்ணை ஆய்வு செய்தனர்.
அப்போது, நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்த ரவிசங்கரின் பைக் என்பதும், மூன்று ஆண்டிற்கு முன் சேலம், அரசு மருத்துவமனையில் திருடு போனதும், இதுதொடர்பாக ரவிசங்கர் கொடுத்த புகாரின் பேரில், நகர போலீசார் போலீசார் (குற்றப்பதிவு எண் - 04/2022) வழக்குப் பதிந்து பைக்கை தேடியது தெரிய வந்தது.
இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் அளித்த தகவலின் பேரில், சேலம் நகர சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குமரேசன் முன்னிலையில் உரிமையாளர் ரவிசங்கரிடம் நேற்று காலை பைக்கை பெண்ணாடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து, சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் கூறுகையில், 'இ - பீட்' செயலி என்பது தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் தினசரி பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளின் விபரங்களை பதிவேற்றம் செய்யப்படும் செயலி ஆகும். இந்த செயலியை வாகன சோதனைக்கு பயன்படுத்த எஸ்.பி., ஜெயக்குமார் அறிவுறுத்தி உள்ளார். நேற்று முன்தினம் இரவு பெண்ணாடத்தில் வாகன சோதனை செய்தபோது, 3 ஆண்டுகளுக்கு முன் சேலத்தில் காணாமல் போன பைக் இங்கு கிடைத்துள்ளது' என்றார்.