ADDED : அக் 21, 2024 06:29 AM

திட்டக்குடி: நெய்வேலி இரண்டாம் சுரங்கத்திலிருந்து ரூ.479 கோடி செலவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கங்கைகொண்டான், குறிஞ்சிப்பாடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை 4 பேரூராட்சிகள், 2 நகராட்சிகள் மற்றும் 3 ஒன்றியங்களில் உள்ள கிராமங்கள் பயன்பெறும் வகையில், குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பணிகள் முழுமை பெறும் நிலையில் குழாய்கள் மூலம் சோதனை அடிப்படையில் தண்ணீர் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இயக்கப்படுவதால் பல இடங்களில் குழாய் உடைந்து சாலையில் பொது மக்களுக்கு இடையூறாக தண்ணீர் அதிகளவில் வெளியேறுகிறது.
அதனை கூட்டுக்குடிநீர் திட்ட ஊழியர்களும் அவ்வப்போது சீரமைக்கின்றனர். திட்டக்குடி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு நேற்று மாலை கூட்டுக்குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு, அதிகளவில் தண்ணீர் சாலையில் ஓடியது. இதனால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் அவ்வழியே செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.

