/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் பெண்ணையாற்றில் உடைந்த கரை... சீரமைக்கப்படுமா?; 10 கிராமங்களில் தண்ணீர் புகும் அபாயம்
/
கடலுார் பெண்ணையாற்றில் உடைந்த கரை... சீரமைக்கப்படுமா?; 10 கிராமங்களில் தண்ணீர் புகும் அபாயம்
கடலுார் பெண்ணையாற்றில் உடைந்த கரை... சீரமைக்கப்படுமா?; 10 கிராமங்களில் தண்ணீர் புகும் அபாயம்
கடலுார் பெண்ணையாற்றில் உடைந்த கரை... சீரமைக்கப்படுமா?; 10 கிராமங்களில் தண்ணீர் புகும் அபாயம்
ADDED : ஆக 02, 2025 06:47 AM

கடலுார், ஆக. 2- கடலுார் பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது உடைந்த கரையை இதுவரை சீரமைக்காததால் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம் மேற்கே உள்ள 18 மாவட்டங்களுக்கு வடிகால் மாவட்டமாக உள்ளது. மேற்கே பெய்து வரும் மழை மற்றும் வெள்ளநீர் கடலுார் மாவட்டத்தில் வழியாக ஓடும் கொள்ளிடம், கெடிலம், மணிமுக்தாறு, பெண்ணையாறு ஆகியவற்றின் வழியாக வங்க கடலில் வடிகிறது.
கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது கடலுார் பெண்ணையாற்றின் கரைகள் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள நகரங்கள், கிராமங்களில் தண்ணீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்புச்சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து பெண்ணையாற்றின் வடக்கு கரை பெரிய கங்கணாங்குப்பம் பாலத்தில் இருந்து கடல் பகுதி வரை 5.75 கோடி ரூபாய் மதிப்பில் கரை பலப்படுத்தும் பணி நடந்து முடிந்தது. பெண்ணையாற்றிற்குள் பரவலாக கிடந்த மணலைக்கொண்டு பொக்லைன் இயந்திரத்தால் கரை அமைக்கப்பட்டது.
அணையின் மேல் பரப்பில் கிராவல் மண் பரப்பப்பட்டது. கரை அமைக்கும் போது, முழுக்க முழுக்க மணலாக இருந்ததால் மண் பிடிப்பு தண்மை சிறிது கூட இல்லை.
இதற்கிடையே, பெண்ணையாற்றில் வந்த தண்ணீர் வேகத்தால் எளிதாக கரையை சேதப்படுத்தியது. கிட்டதட்ட தண்ணீர் வேகமெடுக்கும் இடங்களில் எல்லாம் கரை பாழானது.
குறிப்பாக, பெண்ணையாறு பாலத்தின் மேற்கு பகுதி கரையிலும், நாணமேடு கிராமத்தையொட்டிய பகுதியிலும் கரை உடைந்து தண்ணீர் வெளியேறியது. நாணமேடு அருகே 300 மீ., நீளத்திற்கும், பெரிய கங்கணாகுப்பத்தில் 150 மீ., நீளத்திற்கும் மொத்தம் 450 மீ., நீளம் கரை அமைக்கும் பணி நடந்தது.
அந்த நேரத்தில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைத்தனர். அதன் பின்னர் பெண்ணையாற்றில் அதிகளவு சென்ற தண்ணீர் கட்டுக்குள் வந்தது. அதன்பிறகு உடைந்த பகுதியை பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து தெற்கு கரைப்பகுதியில் புதிதாக கரை அமைக்கும் பணியில் ஆர்வம் காட்டினர்.
தற்போது 8 மாதங்கள் கடந்து விட்டது. வரும் அக்., மாதம் மழை காலம் துவங்கப்படவுள்ளது. தமிழகத்தில் மழை காலத்தில் கடலுார் மாவட்ட மக்களுக்கு பெரும் பிரச்னை ஏதும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் கர்நாடகாவில் பெய்து வரும் கன மழைதான் இங்கு வெள்ளமாக உருவெடுக்கும்.
தற்போது மேட்டூர் அணை திறக்கப்பட்டு கொள்ளிடத்தில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மற்றொரு வடிகாலான சாத்தனுார் அணையின் மொத்த கொள்ளளவான 118 அடியில் 110 அடி நீர் நிரம்பியுள்ளது.
மீதியுள்ள 8 அடி தண்ணீரும் ஒரு நாள் கனமழை பெய்தால் நிரம்பி விடும். தண்ணீர் திறந்து விடப்பட்டால் மீண்டும் பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்.
சுற்றுப்பகுதியில் உள்ள நாணமேடு, உச்சிமேடு, கங்கணாங்குப்பம், சுப உப்பலவாடி, தியாகுநகர், பாலாஜி நகர், சரஸ்வதி நகர் உள்ளிட்ட பல நகர்கள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை அபாய நிலை உள்ளது. எனவே உடைந்த கரையை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.