/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜெர்மன் மொழி பயிற்சி வகுப்பு விண்ணப்பிக்க அழைப்பு
/
ஜெர்மன் மொழி பயிற்சி வகுப்பு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஆக 11, 2025 07:14 AM
கடலுார், : ஜெர்மனி நாட்டிற்கு நர்சிங் வேலைக்கு செல்லும் ஆதிதிராவிடர், பழங்குடியினத்தவருக்கு தாட்கோ நிறுவனம் மூலம் ஜெர்மன் மொழி பயிற்சி அளிக்கப்படுகிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு:
ஜெர்மனி நாட்டில் பி.எஸ்.சி., நர்சிங், பொது நர்சிங் மற்றும் டிப்ளமோ மருத்துவச்சி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.
நர்சிங் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
பயிற்சி வகுப்பில் சேர பி.எஸ்.சி., நர்சிங், பொது நர்சிங் மற்றும் டிப்ளமோ மருத்துவச்சி படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும்.
பயிற்சி காலம் 9 மாதம். பயிற்சியின் போது உணவு, தங்கும் விடுதி, பயிற்சி செலவு தொகை போன்றவை தாட்கோ வழங்கும்.
பயிற்சி முடித்த தகுதியான நபர்களை தேர்வு செய்து 2.50 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை ஊதியத்துடன் ஜெர்மனி நாட்டின் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
கடலுார் மாவட்டத்தில் விருப்பம் உள்ள நர்சிங் பிரிவு படித்தவர்கள் www.tahdco.com தாட்கோ இணைய தளம் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.