/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கன மழையால் மரவள்ளிக்கிழங்கு விலை ... வீழ்ச்சி ; கடலுார் மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்பு
/
கன மழையால் மரவள்ளிக்கிழங்கு விலை ... வீழ்ச்சி ; கடலுார் மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்பு
கன மழையால் மரவள்ளிக்கிழங்கு விலை ... வீழ்ச்சி ; கடலுார் மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்பு
கன மழையால் மரவள்ளிக்கிழங்கு விலை ... வீழ்ச்சி ; கடலுார் மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்பு
ADDED : அக் 25, 2025 07:01 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பெய்த கனமழையால் மரவள்ளி விலை கடும் வீழ்ச்சிஅடைந்தது.
அதனால் மரவள்ளி விவசாயிகள் கடும் சோகத்தில் உள்ளனர்.
கடலுார் மாவட்டத்தில் மரவள்ளிப்பயிர் 15 ஆயிரம் ஏக்கரில் பயிர் செய்யப்படுகிறது. களிமண் மற்றும் கரிசல் மண் மரவள்ளிப்பயிருக்கு ஏற்றது. இப்பயிரை இரவையாகவும், மானாவாரியாகவும் பயிர் செய்யலாம். இதிலிருந்துதான் சேலம், ஆத்துார், பகுதிகளில் ஜவ்வரிசி, ஸ்டார்ச், கால்நடைகளுக்கு தீவனம் தயாரிக்கவும் பயன்படுகிறது.
இது ஒரு ஆண்டிற்கு வளரக்கூடிய பயிராகும். மிதமான மழை மரவள்ளிக்கு கிழங்கை பருமணாக்கும் தன்மைக் கொண்டது. அதே சமயம் மழை அதிகமானால் கிழங்கு அழுகிப்போகும் வாய்ப்பு அதிகம்.
கடந்த ஜனவரி மாதத்தில் மரவள்ளி பயிர் சாகுபடி துவங்கப்பட்டது. தற்போது நன்கு வளர்ந்த செடி கிழங்கு பருத்து அறுவடைக்கு தயாராக இருந்தது.
இப்பயிர் வாரம் 50 மி.மீ., மழை வரை தாக்கு பிடிக்கக்கூடியது. அக்டோபர் மாதத்தில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. அதனால் முன்பருவத்தில் பயிர் செய்த விவசாயிகள் கிலோ 30 ரூபாய்க்கு சமையலுக்காக விற்பனை செய்து லாபம் ஈட்டினர்.
இந்த அறுவடை பெரிய அளவில் விற்பனையாவது இல்லை. பொது மக்கள் தங்களின் தேவைக்காக மட்டும் வாங்கி சமையலுக்கு பயன்படுத்தினர்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு கடலுார் மாவட்டத்தில் கனமழை 17.9செ.மீ, கொட்டியது. இதில் தாழ்வான விவசாய நிலங்களில் போடப்பட்டிருந்த மரவள்ளி கிழங்கு தண்ணீர் தேங்கி அழுக துவங்கியது. மேலும் களிமண் பகுதியில் தண்ணீரை உறிஞ்சும் தன்மை இல்லாததால் நிலத்திலேயே தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால் கிழங்குகள் அழுகும் நிலைக்கு சென்ற உடன் போர்க்கால அடிப்படையில் மரவள்ளிச்செடியில் இருந்து பிடுங்கி அப்புறப்படுத்தி விற்பனை செய்திட வேண்டும். இத்தருணத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தொழிற்சாலை நிர்வாகத்தினர். கிலோ 4.50 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். அதுவும் கிலோ 4.50 ரூபாய் விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடைவதில்லை.
அதில் மரவள்ளிச்செடி பிடுங்குவதற்காகவும், மரவள்ளிக்கிழங்கை செடியில் பிரித்து எடுப்பதற்காவும் தனியாக கூலி தரவேண்டியுள்ளது. இதில் கூலி போக எஞ்சியது வெறும் சொற்ப பணம் தான். ஒரு ஆண்டு முழுவதும் பாதுகாத்து வந்த பயிர் அறுவடை நேரத்தில் இயற்கை கைகொடுக்கவில்லை.
இதனால் மரவள்ளி விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டு கனமழையினால் சாகுபடி செய்த செலவுக்கு கூட பணம் மிச்சமாகவில்லை என விவசாயிகள் தரப்பில் வருத்தத் துடன் தெரிவித்தனர்.

