ADDED : பிப் 13, 2024 11:48 PM
செஞ்சி : பெண்ணிடம் 10 சவரன் தாலி செயினை பறித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
செஞ்சி அடுத்த என்.ஆர்.பேட்டை பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜானகிராமன், 30; பைனான்சில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று மாலை தனது மனைவி பிரியங்கா, 26; மற்றும் 4 வயது மகனுடன் செஞ்சியில் ஷாப்பிங் முடித்துக் கொண்டு, பூமியான்குட்டையில் உள்ள பிரியங்காவின் தாய் வீட்டிற்கு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து இரவு 7:30 மணிக்கு வீட்டிற்கு பைக்கில் திரும்பினர். வீட்டிற்கு வந்ததும் பைக்கிலிருந்து இறங்கிய பிரியங்காவின் கழுத்தில் இருந்த 10 சவரன் தாலிச் செயினை, பின் தொடர்ந்து பல்சர் பைக்கில் வந்த ஹெல்மெட் மற்றும் மாஸ்க் அணிந்து வந்த இருவர் பறித்துச் சென்றனர்.
செஞ்சி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு இரவு ரோந்தை தீவிரப்படுத்தி மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

