/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வரின் மினி ஸ்டேடியம் திட்டம் : பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
/
முதல்வரின் மினி ஸ்டேடியம் திட்டம் : பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
முதல்வரின் மினி ஸ்டேடியம் திட்டம் : பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
முதல்வரின் மினி ஸ்டேடியம் திட்டம் : பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : நவ 13, 2025 09:01 PM

கடலுார்: தமிழக முதல்வரின் தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் திட்டத்தின் கீழ், கடலுார் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள, திட்டங்களை விரைந்து செயல்படுத்த இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என, உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபின் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அறிவித்தார். அதன்படி 234 சட்டசபை தொகுதிகளில், 61தொகுதிகளில் ஸ்டேடியங்கள் இருப்பது கண்டறியப்பட்டதால் மீதமுள்ள 173தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
முதல் கட்டமாக முதல்வர் ஸ்டாலினின் கொளத்துார் தொகுதி, துணைமுதல்வர் உதயநிதியின் சேப்பாக்கம் தொகுதி மற்றும் வாணியம்பாடி, காங்கேயம், சோழவந்தான், ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம், ஆலங்குடி, காரைக்குடி தொகுதிகளில் தலா, 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி ஸ்டேடியங்கள் கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் துவங்கியது.
இரண்டாம் கட்ட பட்டியலில் உத்திரமேரூர், மேட்டூர், கீழ்பென்னாத்துார், கலசப்பாக்கம், கீழ்வேளூர், தாராபுரம், சேந்தமங்கலம், தாம்பரம், குறிஞ்சிப்பாடி, கும்பகோணம், பென்னாகரம், உசிலம்பட்டி, மேலுார், திண்டுக்கல், ஆத்துார், சேலம், ராமநாதபுரம், மொடக்குறிச்சி, பண்ருட்டி ஆகிய, 19 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது.
மார்ச் முதல் வாரத்தில் நடந்த விழாவில் சேப்பாக்கம், காரைக்குடி, சோழவந்தான், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் கட்டி முடிக்கப்பட்ட மினிஸ்டேடியங்களை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில், முதல்கட்ட பட்டியலில் அறிவிக்கப்பட்ட தொகுதியில் மினிஸ்டேடியங்கள் கட்டும் பணி நடக்கிறது. இரண்டாம் கட்ட பட்டியலில் அறிவிக்கப்பட்ட இடங்களில் கட்டுவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மூன்றாம் கட்ட பட்டியலில் 25தொகுதிகள் இடம்பெறும் என்றும், வரும், 2026ஜனவரிக்குள் அவை கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மூன்றாம் கட்டமாக கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் உட்பட தமிழகத்தின் 40தொகுதிகளில் நடப்பாண்டில் ரூ.120கோடி மதிப்பில் மினிஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
கடலுார் மாவட்டத்தில், குறிஞ்சிப்பாடி தொகுதி வழுதலம்பட்டு கிராமத்தில் மினி ஸ்டேடியம் கட்டுவதற்கான பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
பண்ருட்டி தொகுதி காடாம்புலியூர் பகுதியில் தேர்வான இடம் தகுதியானதாக இல்லாததால், மாற்று இடம் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர்.
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகளுக்காக டெண்டர் கோரப்பட உள்ளது. இப்பணிகளை விரைந்து செயல்படுத்தி விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

