ADDED : டிச 22, 2024 09:24 AM

கடலுார் : பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தில், மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் சிபி ஆதித்யாசெந்தில்குமார் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் பயிலும் மாணவர்களின் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையில், பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் யூனிசெப் நிறுவனம் இணைந்து திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
மாணவர்களின் படைப்புத்திறனை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட, மாநில மற்றும் தேசியஅளவில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டிகளில் மாணவர்கள் உருவாக்கும் புதிய புத்தாக்க கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுசிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு நடந்த மாநில அளவிலான இறுதிப்போட்டியில், பண்ருட்டி சுப்பராய செட்டியார் பெண்கள்மேல்நிலைநிலைப் பள்ளி மாணவிகளான கவினா, மோகனப்பிரதிபா, மோகனலட்சுமி, கீர்த்தனா மற்றும் கார்த்திகா ஆகியோர், கனரகவாகனங்கள் அதிக சுமையை தாங்கி செல்வதனால் சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் பொருட்டு உருவாக்கியகண்டுபிடிப்புக்கு 3ம் பரிசு கிடைத்தது.
இந்த கண்டுபிடிப்பிற்காக 10,000 ரூபாய் காசோலை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.அதற்கான காசோலை மற்றும் சான்றிதழை, கடலுாரில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ராஜசேகரன், தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவன திட்டமேலாளர் எழில்ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.