சம்பா சாகுபடிக்கு அனைத்து முன்னேற்பாடுகளும் தயார்: கலெக்டர் தகவல்
சம்பா சாகுபடிக்கு அனைத்து முன்னேற்பாடுகளும் தயார்: கலெக்டர் தகவல்
UPDATED : செப் 07, 2026 11:25 PM
ADDED : செப் 07, 2026 10:55 PM
கடலுார்:மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
இந்தாண்டு மாவட்டத்தில், 2,16,500 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பாசன நீர் நிலையை கருத்தில் கொண்டு, விவசாயிகள் அதிக பரப்பளவில் நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ள வேண்டும்.
நீர் பயன்பாட்டை சிக்கனமாக்கும் வகையில் ஆடுதுறை 54, ஆடுதுறை 58, டிபிஎஸ் 5, கோ 52, கோ 55, கோ 56, கோ 58, பிபிடி5204, திருச்சி 3, ஏஎஸ்டி 21, கோ 50, மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி, திருச்சி 5 மற்றும் டிகேஎம் -13 போன்ற மத்திய கால நெல் ரகங்களை செப்டம்பர் மாத இறுதிக்குள் விதைக்க அறிவுறுத்தப்படுகிறது.
சம்பா பருவத்திற்காக 750 டன் சான்று பெற்ற நெல் விதைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக 142 டன் விதைகள் வழங்கப்பட்டுள்ளது. 581 டன் இருப்பில் உள்ளது.
தனியார் விதை விற்பனை நிலையங்கள் வாயிலாக 593 டன் விதைகள் வழங்கப்பட்டுள்ளது. 1616 டன் இருப்பில் உள்ளது.
மத்திய அரசு விதை வினியோகத்திற்கான மானியத்தினை நிறுத்தியுள்ள நிலையில், நடப்பு ஆண்டில் மாநில நிதியிலிருந்து ரூ. 85.40 லட்சம் ஒதுக்கீட்டில் 427 டன்னில் 50 சதவீத மானியத்தில் சான்று பெற்ற நெல் விதைகள் வினியோகம் செய்யப்படும்.
தற்போது மாவட்டத்தில் இந்த மாதத்திற்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் உரம், விதைப்பு, நடவு மற்றும் களையெடுப்பு உள்ளிட்ட பணிகளுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள், வேளாண் பொறியியல் துறையின் வாயிலாக வேளாண் இயந்திர வாடகை மையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
வேளாண் இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலியில் உள்ள இ-வாடகை 2.0 வசதியை பயன்படுத்திப் பதிவு செய்து பயன்பெறலாம்.
