/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொடரும் ரேஷன் அரிசி கடத்தல் : நடவடிக்கை தேவை
/
தொடரும் ரேஷன் அரிசி கடத்தல் : நடவடிக்கை தேவை
ADDED : டிச 13, 2025 06:00 AM
-நமது நிருபர்-: கடலுார் மாவட்டத்தில் தொடர்கதையாகி வரும் ரேஷன் அரிசி கடத்தலுக்கு போலீசார் உரிய தீர்வு காண கோரிக்கை எழுந்துள்ளது.
கடலுார் மாவட்டத்தில் விருத்தாசலம், திட்டக்குடி, பண்ருட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது.
கடந்த ஏப்., 9ம் தேதி பண்ருட்டியில் 1.2 டன் அரிசி, மே மாதத்தில் பெண்ணாடத்தில் 3 டன் அரிசி, செப்டம்பர் மாதத்தில் ஆவினங்குடியில் 2.8 டன் அரிசி, பெண்ணாடத்தில் 1.25 டன் அரிசி என டன் கணக்கில் அரிசி கடத்தல் நடப்பது வாடிக்கையாக உள்ளது.
மாபியாக்கள் கொடுக்கும் கமிஷன் காசுக்கு ஆசைப்பட்டு ஒவ்வொரு ஊரிலும் புரோக்கர்கள் உருவாகி, ரேஷன் அரிசி கடத்துவதற்கு துணை போகின்றனர்.
அவ்வப்போது போலீசாரும், அரிசி கடத்தும் வாகனங்களை பிடித்து தொடர்புடைய நபர்களை கைது செய்து வருகின்றனர். நடப்பாண்டில் கடலுார் மாவட்டத்தில் இருந்து கடத்தப்பட்ட 75 டன் ரேஷன் அரிசி, 1050லிட்டர் மண்ணெண்ணெயை புட்செல் போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனாலும், ரேஷன் அரிசி கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது.
கடந்த ஜனவரி மாதம், கடலுார் மாவட்ட எஸ்.பி.,யாக ஜெயக்குமார் பொறுப்பேற்ற பின்பு மாவட்டத்தில் புரையோடிப் போயிருந்து கஞ்சா, லாட்டரி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கூண்டோடு அழிப்பதில் ஆர்வம் காட்டி மொத்த நெட் வொர்க்கையும் அழித்தார்.
அதுபோல ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நெட்வொர்க்கையும் மொத்தமாக அழித்தால் தான், ரேஷன் அரிசி கடத்தலுக்கு தீர்வு கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

