ADDED : ஏப் 03, 2026 05:17 AM
கடலுார்: கடலுார் மாநகராட்சி கவுன்சிலர்கள் 2 பேர், சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதால் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் வழங்கினர்.
தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. கடலுார் மாவட்டத்தில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர்கள் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.கடலுார் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இதில், 1 வது வார்டில், வி.சி., கட்சி கவுன்சிலர் புஷ்பலதா, 14வது வார்டில் த.வா.க., கட்சியை சேர்ந்த கவுன்சிலராக கண்ணன் உள்ளனர்.
இதில், புஷ்பலதா வரும், 9ம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலில் உழவர்கரை தொகுதியில் வி.சி., கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் த.வா.க., வேட்பாளராக கண்ணன் போட்டியிடுகிறார்.
இதன் காரணமாக கண்ணன், புஷ்பலதா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி மாநகராட்சி அலுவலகத்தில் கடிதம் வழங்கினர்.
