/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் போராட்டம்! வெளிநடப்பு, தர்ணா, வாக்குவாதத்தால் பரபரப்பு
/
கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் போராட்டம்! வெளிநடப்பு, தர்ணா, வாக்குவாதத்தால் பரபரப்பு
கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் போராட்டம்! வெளிநடப்பு, தர்ணா, வாக்குவாதத்தால் பரபரப்பு
கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் போராட்டம்! வெளிநடப்பு, தர்ணா, வாக்குவாதத்தால் பரபரப்பு
ADDED : ஜன 13, 2024 03:46 AM

கடலுார்: கடலுார் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு, தர்ணா, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போராட்டகளமானது.
கடலுார் மாநகராட்சி கூட்டம் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடந்தது. கமிஷனர் காந்திராஜ், துணை மேயர் தாமரைச்செல்வம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
வாழை இலையுடன்
சுபாஷினி ராஜா (தி.மு.க.,): திருமண விழாவில் போடக் கூடிய மேஜை நாற்காலிகள் போட்டால் எப்படி உட்காருவது என கூறி, தாம் கொண்டு வந்த வாழைஇலையை மேஜை மீது விரித்து எதிர்ப்பு தெரிவித்தார்.
கமிஷனர்: மாநகராட்சி கூட்டம் நடத்துவதற்கு மேஜைகள், நாற்காலிகள் உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்த இந்த கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. விரைவில் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
பா.ம.க., வெளிநடப்பு
சரவணன் (பா.ம.க): கூட்டத்திற்கு வரும்போது, காலி குடம், ராந்தல் விளக்கு போன்றவற்றை எடுத்து வந்தார். எனது வார்டில் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். தெரு விளக்குகள் எரிவதில்லை. சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. இதனை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் என, வெளியேறினார்.
கவுன்சிலர் தர்ணா
சசிகலா ஜெயசீலன் (தி.மு.க.,): பாதாள சாக் கடை வழிந்தோடுகிறது. அதிகாரிகளுக்கு போன் செய்தால் எடுப்பதில்லை. கவுன்சிலர்களுக்கு உரிய மரியாதை வழங்கவில்லை எனக் கூறி மேயர் முன், தரையில் அமர்ந்து அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினார்.
மேயர் சுந்தரி ராஜா: அதிகாரிகள் போனில் கூப்பிட்டால், கவுன்சிலர்களுக்கு உரிய மரியாதை அளித்து அவர்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
மேயர் சுற்றிவளைப்பு
அதைத்தொடர்ந்து தி.மு.க., கவுன்சிலர்கள் பிரகாஷ், தமிழரசன், சரத் தினகரன், சுமதி ரங்கநாதன், மகேஸ்வரி விஜயகுமார், பாரூக்அலி, கீர்த்தனா ஆறுமுகம், கர்ணன் ஆகியோர் மேயரை சுற்றி வளைத்து வாக்குவாதம் செய்தனர்.
எங்கள் 10 வார்டுகளில் மட்டும் எந்த பணியும் நடைபெறவில்லை. நாங்கள் என்ன செய்தால் பணிகள் நடக்கும். மக்கள் மீது கோபமா, அல்லது எங்கள் மீதா.
இதே நிலை தொடர்ந்தால் உங்கள் அனுமதியின்பேரில் ராஜினாமா செய்கிறோம். எங்கள் பகுதியில் இதுவரை என்ன பணிகள் நடந்துள்ளன என, சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
மேயர் சுந்தரி ராஜா: எனது வார்டில் சாலைபோட பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் தொடங்கவில்லை. எனது வார்டுக்கும் இந்த நிலைதான். ஏனென்றால், கடந்த சில மாதங்களாக பணிகள் செய்த ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கவில்லை.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் கையெழுத்து பெற கேட்டால் அலைக்கழித்து வருகின்றனர். இதனால் ஒப்பந்ததாரர்கள் மாநகராட்சியில் பணியே வேண்டாம் என, கும்பிடுபோட்டு செல்கின்றனர்.
மேலும் 10 வார்டு கவுன்சிலர்கள் கோரிக்கை தொடர்பாக என்னிடம் மனு கொடுத்துள்ளீர்களா, சொல்லுங்கள், விளக்கமளிக்கிறேன். உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆரமுது (தி.மு.க.,): நீங்களே பேசிக்கொண்டே போனால் நாங்கள் எப்படி பேசுவது என கவுன்சிலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
விஜயலட்சுமி செந்தில் (தி.மு.க.,): எனது வார்டில் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. மாடுகள் சாலைகளில் திரிவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
அப்போது கீர்த்தனா ஆறுமுகம் எழுந்து விஜயலட்சுமி என்னை மரியாதை குறைவாக பேசிவிட்டார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறி மேயர் முன்பு அமர்ந்து வாக்குவாதம் செய்தார்.
மேயர்: என்ன நடந்தது என்றே தெரியவில்லை. எப்படி இருந்தாலும் நான் மன்னிப்பு கோருகிறேன் என்றார்.
சங்கீதா: எந்த மாநகராட்சி கூட்டத்திலும் பேச முடியவில்லை என கூறி, கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தார்.
கவுன்சிலர்கள் தர்ணா
மாநகராட்சி கூட்டம் முடிவடைந்த பிறகும், ஏற்கனவே பன்றிகள் நடமாட்டம் குறித்து பேசிய விஜயலட்சுமி செந்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி தி.முக.., 8 கவுன்சிலர்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அதேப்போல தங்கள் வார்டில் எந்த பணிகளும் நடைபெறவில்லை என பா.ஜ., கவுன்சிலர் சக்தி வேல் போர்ட்டிகோவில் படுத்து போராட்டம் செய்தார். இதனால், மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.