டாஸ்மாக் கடைக்கு மா.கம்யூ., கட்சியினர் பூட்டுப்போட வந்ததால் திடீர் பரபரப்பு
டாஸ்மாக் கடைக்கு மா.கம்யூ., கட்சியினர் பூட்டுப்போட வந்ததால் திடீர் பரபரப்பு
ADDED : அக் 30, 2026 04:34 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பவர் பிளாண்ட் நகரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, நேற்று மா.கம்யூ.,வினர் பூட்டுப்போட வந்ததால், பரபரப்பு நிலவியது.
பரங்கிப்பேட்டை பவர் பிளாண்ட் நகரில், குடியிருப்புகளுக்கு அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதனால், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, மா.கம்யூ., சார்பில், சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, புவனகிரி தாலுகா அலுவலகத்தில் கடந்த ஆக.10ம் தேதி தாசில்தார் ஷானாஸ் தலைமையில், பேச்சுவார்த்தை நடந்தது. அதில், 50 நாளில், மாற்று இடம் தேர்வு செய்து, டாஸ்மாக் கடையை அகற்றிக் கொள்வதாக டாஸ்மாக் அதிகாரி தெரிவித்தார். ஆனால், அதன்படி டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து நேற்று மா.கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு தலைமையில் ஒன்றிய செயலாளர் விஜய், ஒன்றியக்குழு ஜெயசீலன், நகர செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை பூட்டு போட ஊர்வலமாக வந்தனர்.
அவர்களிடம், ஏ.எஸ்.பி. சத்திரிய கவின் , தாசில்தார் ஷானாஸ், டாஸ்மாக் மண்டல மேலாளர் கந்தன் ஆகியோர், மூன்று மாதத்திற்குள் டாஸ்மாக் கடையை அகற்றிக் கொள்வதாக உறுதியளித்தனர். அதனையேற்று மா.கம்யூ.,வினர் கலைந்து சென்றனர்.
