மதுபாட்டில் விற்றவர் கைது
விருத்தாசலம்: கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் நேற்று காவனுார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ஜெயவேல், 57; என்பவரை கைது செய்து குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வீடு புகுந்து திருட்டு
குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 34; வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தவர், கடந்த 5ம் தேதி சிதம்பரத்தில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றவர் நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினார்.
அப்போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த நான்கரை சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரிந்தது.
குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
மொபைல் போன் திருடியவர் கைது
காட்டுமன்னார்கோவில்: செட்டித்தாங்கலைச் சேர்ந்வர் ராஜதுரை, 26; கொத்தனார். கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு வீட்டில் செல்போனுக்கு ஜார்ஜ் போட்டு துாங்கினார். காலை எழுந்து பார்த்த போது மொபைல் போனை காணவில்லை.
இது குறித்த புகாரின் பேரில், காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து, மொபைல் போனை திருடிய குருங்குடியைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் கோகுலகண்ணன் என்பரை கைது செய்தனர்.
இளம்பெண் தற்கொலை
நெல்லிக்குப்பம்: ஜீவா நகரைச் சேர்ந்தவர் பிரேம்ஜி, 32; கூலித்தொழிலாளி. இவரது மனைவி முனீஸ்வரி, 26; இருவரும் 5 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த மாதம் நெல்லிக்குப்பம் ஜீவா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். வேலைக்காக ஆந்திரா போவதாக பிரேம்ஜி கூறியதால் முனீஸ்வரி வேண்டாம் என தடுத்துள்ளார்.
ஆனால், பிரேம்ஜி ஆந்திரா செல்வதில் உறுதியாக இருந்ததால், மனமுடைந்த முனீஸ்வரி நேற்று மாலை வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.