ADDED : செப் 03, 2025 07:15 AM
பெண்ணுக்கு மிரட்டல் கருவேப்பிலங்குறிச்சி அடுத்த ராஜேந்திரபட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகள் ராஜபிரியா, 24; அதே பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார், 29; ராஜப்பிரியா வீட்டின் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் இருப்பதால், அவரது வீட்டின் முன் அஜித்குமார் நேற்றுமுன்தினம் நெல்லை கொட்டியுள்ளார். இதனை ராஜபிரியா மாமா ராஜா தட்டிக் கேட்டதால் தகராறு ஏற்பட்டது. இதல், அஜித்குமார் ஆத்திரமடைந்து, ராஜா, ராஜபிரியா தாய் மஞ்சுளா ஆகியோரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார் . கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, அஜித்குமாரை கைது செய்தனர்.
மகள் மாயம்; தாய் புகார் நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் சுஷ்மிதா, 20; செவிலியர் பயிற்சிக்கு படித்து வருகிறார். இவரை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் காணவி ல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது தாய் அளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாமனை தாக்கியவர் கைது விருத்தாசலம் அடுத்த க.புத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி, 34; இவரது மனைவி ராதிகா, 28; இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில், மனமுடைந்த ராதிகா, பூச்சி மருத்து குடித்து தற்கொலைக்கு முயன்று, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதில், ஆத்திரமடைந்த ராதிகாவின் தம்பி விக்னேஷ் நேற்று முன்தினம் புகழேந்தியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், விக்னேஷ் மீது கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முதியவர் சாவு: போலீஸ் விசாரணை விருத்தாசலம், முல்லை நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி, 60 ; இவரது மனைவி இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். மகள்கள் 2 பேரும் வெளிநாட்டில் உள்ளனர். நேற்று முன்தினம் வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த அவரது அண்ணன் மணிவண்ணன், மூர்த்தியின் அறைக்கு சென்று பார்த்தபோது, மூர்த்தி இறந்து கிடந்தார். வி ருத்தாசலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.