ADDED : பிப் 15, 2024 06:47 AM
சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வெள்ளாற்றில் 7 அடி நீள முதலை தண்ணீரில் உலாவுவதால் பொதுமக்கள், உள்ளூர் மீன்பிடி தொழிலாளர்களை அச்சமடைந்துள்ளனர்.
சேத்தியாத்தோப்பு வெள்ளாறு அணைக்கட்டு நீர்தேக்கத்தில் 7 அடி முதலை நேற்று தண்ணீரில் உலாவிக்கொண்டும், ஆற்றங்கரை மணல் பரப்பில் படுத்திருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேட்டூரிலிருந்து, கொள்ளிடம் அணைக்கரைக்கு வரும் தண்ணீர், அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வருகிறது.
வீராணம் ஏரி உபரி நீர் பூதங்குடி வீனஸ் மதகில் திறந்துவிடப்பட்டு, வெள்ளாற்று அணைக்கட்டில் தேக்கப்பட்டது.
தற்போது, வெள்ளாற்றில் தண்ணீர் முற்றிலுமாக குறைந்து மணல் பரப்பு வெளியே தெரிகிறது.
ஏற்கனவே, தண்ணீர் அதிகம் வந்தபோது, வெள்ளாற்றில் வந்த முதலை, தற்போது தண்ணீர் குறைந்ததால், கரை பகுதிக்கு வருவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
வெள்ளாற்றில் முதலை உள்ளதால், பொதுமக்கள் மற்றும் மீன் பிடிக்கும் உள்ளூர் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

