/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலூரில் புறவழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படுவது எப்போது?
/
கடலூரில் புறவழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படுவது எப்போது?
கடலூரில் புறவழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படுவது எப்போது?
கடலூரில் புறவழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படுவது எப்போது?
ADDED : ஆக 27, 2011 11:26 PM
தமிழகத்தின் பழமையான மாவட்டங்களில் ஒன்றான கடலூர் மாவட்டம், 1984ம் ஆண்டு கடலூர் அடுத்த குடிகாடு கிராமத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது.
தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களை, வெளி மாநிலங்களில் இருந்தும், இங்கு உற்பத்தி செய்த பொருட்களைப் பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்லவும் துவங்கியதால், கடலூர் நகரில் கனரக வாகனப் போக்குவரத்து அதிகரித்தது. இதைக் கருத்தில் கொண்டு, கடலோர மாவட்டங்களை, மாநிலத்தின் தலைநகரான சென்னையோடு இணைக்கும் வகையில், கிழக்கு கடற்கரை சாலைத் திட்டம், 1988ம் ஆண்டு துவங்கப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலை அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடலூருக்கு தென்பகுதியில் உள்ள நாகை மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த காரைக்கால், மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் அனைத்தும், கடலூர் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் சென்று வருகின்றன. கிழக்கு கடற்கரை சாலை வழியாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தும், கடலூர் நகரைக் கடந்தே செல்ல வேண்டியுள்ளது. இந்த சாலையை ஒட்டியே பிரதான வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளதால், இந்த 6 கி.மீ., சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. சென்னை மார்க்கத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள், இப்பகுதியைக் கடந்து செல்ல, 30 நிமிடங்கள் முதல், ஒரு மணி வரை கால விரயமாகிறது. இந்நிலையில், இந்த கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய திருச்சோபுரம் கிராமத்தில் நாகார்ஜுனா ஆயில் சுத்திகரிப்பு நிலையம், பரங்கிப்பேட்டை அடுத்த வேலங்கிராயன்பேட்டையில் கப்பல் கட்டும் தொழிற்சாலை, கரிக்குப்பம் பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பல தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. ஏற்கனவே, போக்குவரத்து நெரிசலால் கடலூர் நகரம் தினம், தினம் திணறி வருவதால், மேற்கண்ட தொழிற்சாலைகள் இயங்கத் துவங்கினால் கடலூரில் போக்குவரத்து அடிக்கடி ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும். இதை தவிர்க்கவும், கிழக்கு கடற்கரை சாலையில் வரும் வாகனங்கள் தடையின்றி செல்லும் வகையில் கடலூர் நகரை ஒட்டி புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என, பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. சென்னை, புதுச்சேரி மார்க்கத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாகவும், பண்ருட்டி மார்க்கத்திலிருந்து கடலூர் வழியாக தென்மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் கடலூர் நகரினுள் வராமல் நேரடியாக செல்லும் வகையில், நெடுஞ்சாலைத் துறையினரால் திட்டம் தயாரிக்கப்பட்டது.
அதன்படி கடலூர் - புதுச்சேரி சாலையில் (60/2 கி.மீ.,) பெண்ணையாறு பாலத்தை ஒட்டியுள்ள ஆல்பேட்டை சோதனைச் சாவடியின் மேற்குப் பகுதியில் ஆற்றங்கரையில் உள்ள கஸ்டம்ஸ் சாலை வழியாக வெளிச்செம்மண்டலம், நத்தப்பட்டு, தோட்டப்பட்டு, குமாரப்பேட்டை, அரிசிபெரியாங்குப்பம், மாவடிப்பாளையம், கண்ணாரப்பேட்டை, காரைக்காடு, குடிகாடு வழியாக சிதம்பரம் சாலையில் (70/6 கி.மீ.,) இணைக்கும் வகையில் 185 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16.200 கி.மீ., தூரத்திற்கு புறவழிச் சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் தோராய திட்ட மதிப்பீடு அறிக்கையை தயார் செய்து அரசுக்குப் பரிந்துரை செய்தனர்.
இத்திட்டத்தில் கடலூர் - பண்ருட்டி, கடலூர் - திருவந்திபுரம், கடலூர் - விருத்தாசலம் நெடுஞ்சாலைகளில் உயர்மட்ட மேம்பாலங்களும், கடலூர் - வெள்ளக்கரை, கண்ணாரப்பேட்டை - ராமாபுரம் சந்திப்புகளில் சாலை மேம்பாலங்களும், கடலூர் - பண்ருட்டி, கடலூர் - விருத்தாசலம், கடலூர் - சிதம்பரம் ரயில்வே பாதைகளிலும், திருவந்திபுரம் கெடிலம் ஆற்றிலும் உயர்மட்ட மேம்பாலம் மற்றும் 10 சாலை சந்திப்புக்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், 16.200 கி.மீ., தூரம் கொண்ட இந்த புறவழிச்சாலைக்கு 14 கி.மீ., தொலைவிற்கு 45 முதல் 70 மீட்டர் அகலத்திற்கு பட்டா நிலங்களை கையகப்படுத்த வேண்டியுள்ளது.
விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரப்படும். டெண்டர் எடுக்கும் கன்சல்டன்சி நிறுவனம், புறவழிச்சாலை அமைய உள்ள இடங்களைப் பார்வையிட்டும், அப்பகுதிகளில் மண்ணின் தன்மை அறிய ஆழ்துளை போர் மூலம் ஆய்வு செய்ய வேண்டும். மண்ணின் தன்மைக்கு ஏற்ப சாலை, பாலம், மேம்பாலங்கள் எந்த வடிவமைப்பில் கட்ட வேண்டும் எனவும், அதற்கான செலவினங்கள் குறித்து விரிவான அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்யும். இந்த அறிக்கையை ஆய்வு செய்த பிறகு அரசு இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ததும் முதல் கட்டமாக வருவாய் துறையினரின் உதவியுடன் நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கும். இவை அனைத்தும் முடிந்த பிறகே புறவழிச்சாலை அமைக்கும் பணி துவங்கும். இது குறித்து, கடந்த 30ம் தேதி கடலூர் வந்த தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம், கடலூர் தொகுதி எம்.எல்.ஏ.,வும் சிறப்பு திட்ட அமலாக்க பிரிவு அமைச்சருமான சம்பத், கடலூர் நகர புறவழிச்சாலை திட்டம் குறித்து வரைபடத்துடன் விளக்கி, இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அதற்கு அமைச்சர் எடப்படாடி பழனிச்சாமி, இதுகுறித்து ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான சுழல் நிதி, விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
- நமது சிறப்பு நிருபர் -

