/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டேக்வாண்டோவில் பதக்கங்களை குவிக்கும் கடலுார் மாணவி
/
டேக்வாண்டோவில் பதக்கங்களை குவிக்கும் கடலுார் மாணவி
டேக்வாண்டோவில் பதக்கங்களை குவிக்கும் கடலுார் மாணவி
டேக்வாண்டோவில் பதக்கங்களை குவிக்கும் கடலுார் மாணவி
ADDED : மே 01, 2025 05:38 AM

கடலுார் : கடலுாரைச் சேர்ந்த 13வயது மாணவி யாழினி, டேக்வாண்டோ போட்டிகளில் பல்வேறு நிலைகளில் பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.
கடலுார் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் மாணவி யாழினி,13. புனித மரியன்னை பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார். இவரது பெற்றோர் ராஜேஷ், ஷியாமளா. இவர் தனது மூன்று வயதிலிருந்த மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கில் டேக்வாண்டோ பயிற்சி பெற்று வருகிறார்.
2017ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை பல்வேறு பகுதியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று ஒன்பது தங்கப்பதக்கங்களை பெற்றார். மேலும், மாநில அளவிலான போட்டிகளில் ஒன்பது முறை பங்கேற்று ஆறு தங்கம், மூன்று வெள்ளி, ஒரு வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
அதேபோல் தேசிய அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் 2018ல் கோவாவிலும், 2022ல் ஊட்டியிலும், 2023ல் ஒடிசாவிலும் நடந்த போட்டிகளில் முதலிடம் பிடித்து மூன்று தங்கப்பதக்கங்களையும், 2022ல் நாசிக்கில் நடந்த போட்டியில் வெள்ளி, 2019ல் விசாக பட்டினத்தில் நடந்த போட்டியில் வெண்கலம் சென்று சாதனை படைத்துள்ளார். எஸ்.ஜி.எப்.ஐ., மற்றும் குடியரசு தின விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். மேலும் கோ-கோ, மாரத்தான், ஓட்டப்பந்தயம் உட்பட பல்வேறு விளையாட்டுகளில் மாவட்ட, மாநில அளவில் பங்கேற்று பதக்கங்களை குவித்துள்ளார்.
மாணவியின் சிறந்த செயல்பாடுகளை பாராட்டி 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் கடலுார் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டரிடம் சிறந்த வீராங்கனைக்கான விருதைப்பெற்றார். மேலும், சமூக நலத்துறையால் வழங்கப்பட்ட சிறந்த பெண் குழந்தைக்கான விருதை 2020 மற்றும் 2024ம் ஆண்டுகளில் பெற்றுள்ளார்.
பயிற்சியாளர் இளவரசன் கூறுகையில், சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் மாணவி. சாதாரண குடும்பத்திலிருந்து வந்து தேசிய அளவிலான பதக்கங்களை பெற்று சாதனை புரிந்துள்ளார். அண்ணா விளையாட்டரங்கம், அவருக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்துள்ளது. என்றார்.