ADDED : ஜூன் 07, 2024 06:14 AM
குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி பகுதியில் சூறைக்காற்றினால், பல கிராமங்களில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து, சேதமாகியது.
குள்ளஞ்சாவடி சுற்றுப்பகுதி கிராமங்களான வழுதலம்பட்டு, சமட்டிக்குப்பம், புலியூர் உள்ளிட்ட பல கிராமங்களில், 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர்.நேற்று முன்தினம் இப்பகுதியில் சூறைக்காற்றுடன் திடீரென மழை பெய்தது. காற்று பலமாக வீசியதால் நூற்றுக்கணக்கான ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன.மேலும், சாயாமல் மீதமுள்ள வாழை மரங்கள் காற்றில் முறுக்கு ஏற்பட்டு, குலை தள்ளும் நிலையை இழந்ததாகவும், ஏக்கருக்கு 1.50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும், தற்போது பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.