/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தண்டு துளைப்பான் தாக்குதலால் நெற்பயிர்கள்... பாதிப்பு; விருத்தாசலம் பகுதி விவசாயிகள் கவலை
/
தண்டு துளைப்பான் தாக்குதலால் நெற்பயிர்கள்... பாதிப்பு; விருத்தாசலம் பகுதி விவசாயிகள் கவலை
தண்டு துளைப்பான் தாக்குதலால் நெற்பயிர்கள்... பாதிப்பு; விருத்தாசலம் பகுதி விவசாயிகள் கவலை
தண்டு துளைப்பான் தாக்குதலால் நெற்பயிர்கள்... பாதிப்பு; விருத்தாசலம் பகுதி விவசாயிகள் கவலை
ADDED : ஜன 25, 2024 04:47 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெல் வயல்களில், தண்டு துளைப்பான் பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளதால், மகசூல் பாதிப்பு ஏற்படும் என்பதால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கடலுார் மாவட்டத்தில், கடந்த 7ம் தேதி மற்றும் 8ம் தேதிகளில் பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்களில் மழைநீர் தேங்கி நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கின.
மூழ்கிய நெற்கதிர்களை, அறுவடை செய்ய முடியாத நிலையில், விவசாயிகள் தவித்தனர். விருத்தாசலம், கம்மாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள், முளைத்தது. பின்னர், ஒருவழியாக அறுவடை செய்தனர்.
இருந்தும், முழுமையான விளைச்சல் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பல இடங்களில் இதுவரை அறுவடை செய்ய முடியாத நிலை நீடித்து வருகின்றனர்.
இந்நிலையில், விருத்தாசலம் பகுதியில், நெற்பயிரில் தண்டு துளைப்பான் பூச்சி தாக்குதலால், கதிர்கள் பதராக மாறியதால், விவசாயிகள் பாதிக்கப்ட்டுள்ளனர்.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார், பரவளூர், கோ.மங்கலம், பெரம்பலுார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்திருந்தனர். ஓரிரு வாரங்களில் சம்பா அறுவடை பணி துவங்க உள்ள நிலையில், பெரும்பாலான நெல் சாகுபடி வயல்களில் தண்டு துளைப்பான் பூச்சி தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இதன்காரணமாக, முற்றிய நெல் மணி அனைத்தும் பதராக மாறியுள்ளது. இதனால், மகசூல் பாதியாக குறையும் என்பதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், உழவு, உரம், பூச்சி கொல்லி மருந்து, ஆள்கூலி உள்ளிட்டவைகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்.
தற்போது, அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிர்களில் உள்ள நெல்மணிகள் பாதியளவு பதராக மாறிவிட்டன. இதனால், செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தண்டு துளைப்பான் பூச்சியால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து, நிவாரணம் மற்றும் காப்பீடு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என கூறினர்.