புறவழிச்சாலை மேம்பாலத்தில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
புறவழிச்சாலை மேம்பாலத்தில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 04:26 PM

விருத்தாசலம்: சேலம் புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலத்தில் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
சென்னை – ஜெயங்கொண்டம், கடலுார் – திருச்சி, சிதம்பரம் – சேலம் மார்க்கத்தில், விருத்தாசலம் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக பஸ், லாரி, கார், வேன் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால் நகரில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், கடந்த 2011ல், கடலுார் மார்க்கத்தில் உள்ள விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் இருந்து மணவாளநல்லுார் பிரிவு சாலை வரை புறவழிச்சாலை போடப்பட்டது.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் விருத்தாம்பிகை ஐ.டி.ஐ., எதிர்முனையில் இருந்து அரசு பழத்தோட்டம், ஆலடி முடக்கு, செராமிக் தொழிற்பேட்டை வழியாக ஜங்ஷன் சாலையுடன் புதிய புறவழிச்சாலை போடப்பட்டது. நகருக்கு வெளியே இருபுறம் புறவழிச்சாலை அமைத்தாலும், நகருக்குள் வாகன நெரிசல் குறைந்தபாடில்லை. இதனால், கனரக வாகனங்களை புறவழிச்சாலையில் போலீசார் திருப்பி விடுகின்றனர்.
இந்நிலையில், சேலம் புறவழிச்சாலையின் குறுக்கே திருச்சி – சென்னை ரயில்வே பாதை மீது மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் மேல்பகுதியில் தார்சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியது. இதனைச் சுட்டிக்காட்டி, ‘தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானதும், ‘பேட்ஜ் ஒர்க்’ செய்யப்பட்டது. தற்போது, சுட்டெரிக்கும் வெயிலில் தார்சாலை உருகி, மேடாக மாறியது.
பள்ளம் மேடாக மாறிய சாலையில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் வேகமாக செல்லும் வாகனங்கள், நிலைதடுமாறி தடுப்புச்சுவரில் மோதியும், எதிரே வரும் வாகனங்களில் மோதும் அபாயம் உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
எனவே, விருத்தாசலம் புறவழிச்சாலை மேம்பால தார் சாலையை பெயர்த்து, சீரமைத்திட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
