ADDED : செப் 19, 2026 03:21 PM
விருத்தாசலம்: கடன் சுமை தாங்காமல் போலீஸ்காரர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கம்மாபுரம் அடுத்த கத்தாழை கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன், 29. உளுந்துார்பேட்டை சிறப்பு காவல் படையில் பணியில் இருந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக துாத்துக்குடி விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி தனலட்சுமி. இருவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், ஒன்னரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கடன் தொல்லையால் மனஉளைச்சலில் இருந்த நாகராஜன், கடந்த 16ம் அவரது மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவரது பேச்சில் மாற்றம் தெரிந்ததால், அவருடன் பணிபுரியும் சக போலீசாருக்கு அவரது மனைவி தொடர்பு கொண்டு தனது கணவரை சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
அப்போது, அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர். திருச்சி காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிப்பது கடினம் என மருத்தவர்கள் கூறியுள்ளனர். இதன்காரணமாக நேற்றுமுன்தினம் அவரது சொந்த ஊரான கத்தாழைக்கு அழைத்து வந்தபோது இறந்தார்.
தகவலறிந்த கம்மாபுரம் போலீசார் நாகராஜன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
