/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புரோக்கர்களின் பிடியில் பத்திரப்பதிவு அலுவலகம்
/
புரோக்கர்களின் பிடியில் பத்திரப்பதிவு அலுவலகம்
ADDED : ஜூன் 18, 2025 05:04 AM
ஸ்ரீமுஷ்ணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சொத்துக்கள் வாங்கவும், விற்கவும் பத்திரப் பதிவு செய்கின்றனர். மூல ஆவணம் மற்றும் பட்டா இல்லாத நிலங்கள், மனைகள் பத்திரப்பதிவு செய்யும் போது கிரயம் செய்யும் இடத்தை பதிவு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரித்து பத்திரப்பதிவு செய்வது வழக்கம்.
ஆனால், இங்கு கடந்த சில ஆண்டுகளாக பத்திரப்பதிவுகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. முறைகேடான பத்திரப்பதிவுகளை பல லட்சங்கள் கொடுத்து வேலைகளை செய்து முடிக்க ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் சில கணினி மையங்கள் பத்திரப் பதிவு அலுவலமாகவே செயல்படுகிறது.
பத்திரப் பதிவு வேலைகளை முடிக்க சில ஆவண எழுத்தர்களை கைவசம் வைத்துள்ள புரோக்கர்கள் ஒரு கனிசமான தொகையை பெற்று அதிகாரிகளையும் கவனித்து விடுகின்றனர். பட்டா இல்லாத சொத்துக்களுக்கு பூர்வீக சொத்துக்கள் என பத்திரங்களை பதிவு செய்து புதிதாக ஆவணங்களை உருவாக்குவதும், அதன் பிறகு பட்டா பெற்று வேறு நபர்களுக்கு கிரயம் செய்து தருவதும் தொடர்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பத்திரம் பதிவு செய்யும் அதிகாரிகளை பலமாக கவனித்து விட்டு மீதமுள்ள தொகையை புரோக்கர்கள் பிரித்து எடுத்துக்கொள்கின்றனர். கடந்த சில வருடங்களாக இது தொடர்வதால் இந்த வேலையில் ருசிகண்ட பத்திரப்பதிவு புரோக்கர்கள் சரியான பத்திரங்கள் பதிவுக்கு செல்லும் போது கூட அதிகாரிகளிடம் கூறி அவற்றை திருப்பி அனுப்ப செய்வதும் அதன் பின்னர் குறிப்பிட்ட தொகை கைமாறியவுடன் பத்திரப்பதிவு வேலைகளை முடித்து தருவதும் தொடர்கிறது. சார்பதிவாளர் அலுவலகத்தில் மூல ஆவணம் இல்லாத சொத்துக்கள் பூர்வீக நிலம் என கூறி பத்திர பதிவுகள் நடக்கும் நிலையில் முறைகேடுகளும் அதிகரித்து வருகிறது. மேலும் தனி நபர்கள் சிலர் கூட்டுக்குடும்ப சொத்துக்களை புரோக்கர்கள் மூலம் வருவாய்த்துறையை ஏமாற்றி வாங்கப்பட்ட பட்டாவைக்கொண்டு குடும்பத்தில் உள்ள மற்ற நபர்களையும் ஏமாற்றி கூட்டுக்குடும்ப சொத்துக்களை தனியாக ஒருவர் விற்பனை செய்த முறைகேடான பத்திரப்பதிவுகளும் நடந்தேறியுள்ளது. மேலும் பத்திரபதிவுகள் செய்ய வாய்மொழியாக சென்று ஆட்சேபனை செய்த இடங்களையும் கனிசமான தொகை கைமாறியவுடன் யாருக்கும் தெரியாமல் பதிவுகளை முடிக்கும் நிலை உள்ளது. இப்படிப்பட்ட முறைகேடான பத்திரப்பதிவுகளை பல லட்சங்கள் கொடுத்து வேலைகளை செய்து முடிக்க ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் ஒரு தனி டீம் கணினி மையம், பத்திரப்பதிவு அலுவலகம் என்ற பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகிறது. பட்டா இல்லாத சொத்துக்களுக்கு பூர்வீக சொத்துக்கள் என பத்திரங்களை பதிவு செய்து புதிதாக ஆவணங்களை உருவாக்குவதும், உருவாக்கிய ஆவணங்களை வைத்து அதன் பின்னர் பட்டா பெற்று வேறு நபர்களுக்கு கிரயம் செய்து தருவதும் தொடர்கிறது. இதனால் சொத்து ஆவணங்கள் சரியாக வைத்துள்ள பாமர மக்களும் அதிக அளவில் செலவு செய்யக்கூடிய நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற முறைகேடான சொத்து பரிமாற்றங்கள் சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருவது எதிர்காலத்தில் அதிக அளவிலான சொத்துக்கள் தொடர்பான சிவில் வழக்குகள் கோர்ட்டுகளுக்கு செல்ல வழி வகுக்கிறது. மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விசாரணை செய்து ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் அதிகரித்து வரும் பத்திரப்பதிவு புரோக்கர்களின்ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். உரிய ஆவணங்கள் இன்றி முறைகேடாக பதியப்பட்ட சொத்துக்களின் பத்திரப்பதிவுகளை ரத்து செய்யவேண்டும்.