முடிந்த பணிகளுக்கு பணம் வழங்காமல் அலைக்கழிப்பு : ஒப்பந்ததாரர்கள் புலம்பல்
முடிந்த பணிகளுக்கு பணம் வழங்காமல் அலைக்கழிப்பு : ஒப்பந்ததாரர்கள் புலம்பல்
ADDED : ஜூன் 10, 2026 05:25 AM
த மிழகத்தில் பல திட்டங்களின் கீழ் அங்கன்வாடி கட்டடம், தார்சாலை, சிமென்ட் சாலை, வடிகால் வசதி, பள்ளி கட்டடம் உள்ளிட்ட பல பணிகள் நடந்து வருகிறது.
இதில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சிமெண்ட்சாலை, கழிவுநீர்கால்வாய்கள்,சில கட்டடங்கள் கட்ட ஒன்றிய அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர்.
இந்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் செய்ய பல ஒப்பந்ததாரர்கள் முன் வருவதில்லை.
ஏனெனில் இந்த திட்டத்தின் கீழ் செய்யப்படும் பணிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களை பணியமர்த்தி, அவர்களை வைத்து வேலை செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வாய்க்கால் வெட்டுதல், குளம் சீரமைத்தல் போன்ற பணிக்கு செல்லும் பணியாளர்கள் கடமைக்காக காலையில் ஒரு ஜி.பி.ஆர்.எஸ்., போட்டோ, மாலையில் ஒரு ஜி.பி.ஆர்.எஸ்., போட்டோ என நேரம் கடத்துபவர்களை வைத்து, சாலை அமைப்பது, கட்டுமான பணியில் ஈடுபடுத்த முடியாத நிலை உள்ளது.
இதனால் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு கட்டுமான பணி வழங்கப்பட்டதாக கணக்கு காட்டி,அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இந்த பணத்தினை அவர்களிடமிருந்து திரும்ப ஒப்பந்ததாரர்கள் பெறுவது கடினமாகவே உள்ளது.
இதற்கு சில சதவீத கமிஷன் கொடுத்து தான் பணத்தினை திரும்ப பெறுகின்றனர்.இதனாலேயே பலர் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சாலை,கட்டடம்,கால்வாய் வேலை செய்யவே முன் வருவதில்லை. அனைத்து ஊராட்சி ஒன்றியத்திலும் இந்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு தி ட்டத்தின் கீழ் செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு பல மாதங்களாக பணம் வழங்காமல் உள்ளது.
இதனால் ஒப்பந்ததாரர்கள் பணிகள் முடித்தாலும் அதிகாரிகளிடம் கட்டடங்களை ஒப்படைப்பதில்லை. சிலர் வேலைகளை முடிக்காமல் காலம் கடத்தி வருகின்றனர். இதனாலேயே பல அரசு கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டும் பயன்பாட்டிற்கு வராமல் பல கோடி மதிப்பிலான கட்டடங்கள் பூட்டியே உள்ளது.
புதியதாக பொறுப்பெற்ற அரசு கண்டுகொள்ளுமா?
