/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓராண்டாக நிதி ஒதுக்காததால் ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள்...முடக்கம்: நிர்வாகம் செய்ய முடியாமல் தனி அலுவலர்கள் திணறல்
/
ஓராண்டாக நிதி ஒதுக்காததால் ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள்...முடக்கம்: நிர்வாகம் செய்ய முடியாமல் தனி அலுவலர்கள் திணறல்
ஓராண்டாக நிதி ஒதுக்காததால் ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள்...முடக்கம்: நிர்வாகம் செய்ய முடியாமல் தனி அலுவலர்கள் திணறல்
ஓராண்டாக நிதி ஒதுக்காததால் ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள்...முடக்கம்: நிர்வாகம் செய்ய முடியாமல் தனி அலுவலர்கள் திணறல்
ADDED : டிச 24, 2025 05:52 AM

மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள மங்களூர் மற்றும் நல்லுார் ஒன்றியங்களில் 130ஊராட்சிகள்,200க்கும் அதிகமான துணை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியிலுள்ள ஊராட்சிகள் பெரும்பாலும் மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு நிதியை நம்பியே வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநில அரசு சார்பில் மாதந்தோறும் ஊராட்சிகளிலுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப ரூ., 75 ஆயிரம் முதல் ரூ., 3 லட்சம் வரை நிதி வழங்கப்படும். இதன்மூலம், ஊராட்சி நிர்வாகத்தில் பணிபுரியும் செயலர்கள், டேங்க் ஆப்ரேட்டர்கள், துாய்மை காவலர்களுக்கு ஊதியம், தெரு மின்விளக்கு, பொது சுகாதாரம் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் செய்கின்றனர்.
நியமனம் மத்திய அரசு சார்பில் நிதிக்குழு மானியத்தில் ஊராட்சிகளின் பரப்பளவு, மக்கள் தொகைக்கு ஏற்ப ரூ., 20 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை வழங்கப்படும். இதனை பயன்படுத்தி சிமெண்ட் சாலை, குடிநீர் பைப் லைன் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால், பொது மக்களின் அத்தியாவசிய பிரச்னைகளான குடிநீர், சாலை, தெரு மின்விளக்குகள் பராமரிப்பு, குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை நிர்வாகம் செய்ய அந்தந்த ஊராட்சி செயலர்களே தனி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
பணிகள் முடக்கம் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்து ஓராண்டு முடிய போகும் நிலையில், ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. ஊராட்சிகள் தோறும் நடப்பாண்டிற்கான திட்டப்பணிகள் குறித்த ஆவணங்கள், கடந்த 6 மாதங்களுக்கு முன் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால், திட்டப் பணிகளுக்கான ஆணை வழங்காமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
மாநில அரசு சார்பில் மாதந்தோறும் ஊராட்சிகளுக்கு 50 சதவீதம் மட்டுமே நிதி வழங்கப்படுகிறது. இதனால், ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்காமல், அடிப்படை வசதிகளில் பராமரிப்பு பணி செய்ய முடியாமல் பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளது.
அலுவலர்கள் திணறல் நிதி கிடைக்காததால் கடந்த சில மாதங்களாக ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளில் பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவுகிறது. இது குறித்து கிராம மக்கள் அப்பகுதிபி.டி.ஓ.,க்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், தங்கள் கிராமத்திற்கு வரும்எம்.எல்.ஏ.,க்களிடம் கூறி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதனை சமாளிக்க, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், பணிகளை நிறைவேற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஆனால், கடந்த நிதி ஆண்டில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் செய்த பணிகளுக்கான முழு திட்டத்தொகை கிடைக்காததால், புதிய திட்டப் பணிகள் செய்ய ஒப்பந்ததாரர்களும் முன் வரவில்லை.
இதனால், கிராம மக்கள் மற்றும் அதிகாரிகள் இடையே தனி அலுவலர்கள் சிக்கி திணறி வருகின்றனர்.
எனவே, ஊராட்சிகள் தோறும் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

