/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் கோவில்களில் தீபாவளி நோன்பு வழிபாடு
/
கடலுார் கோவில்களில் தீபாவளி நோன்பு வழிபாடு
ADDED : நவ 01, 2024 06:18 AM

கடலுார்: கடலுார் அம்மன் கோவில்களில் தீபாவளி நோன்பு சிறப்பு வழிபாடு நடந்தது.
தீபாவளி நோன்பு வழிபாடு செய்வதன் மூலமாக குடும்பம் வளம் பெறும் என்பதை ஐதீகமாக கருதி மக்கள் தீபாவளி நோன்பு கடைப்பிடிப்பது வழக்கம். இந்தாண்டு தீபாவளியொட்டி கடலுார் திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், புதுப்பாளையம், மஞ்சக்குப்பம், செம்மண்டலம், சாவடி மற்றும் சுற்றியுள்ள கடை வீதிகளில் நேற்று, மண்சட்டி, வெற்றிலை, பாக்கு, பழம், நோன்பு கயிறு உள்ளிட்ட பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் கூடியதால் விற்பனை களை கட்டியது.
நோன்பு எடுப்பதற்கான மண் சட்டி 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்தாண்டை விட இந்தாண்டு மண் சட்டி விலை 50 ரூபாய் கூடுதலாக இருந்தது.
நோன்பு விரதம் மேற்கொண்ட பெண்கள் விறகு அடுப்பு, சட்டி, பானையில் அதிரசம் தயார் செய்து, அருகில் உள்ள அம்மன் கோவில்களுக்கு சென்று சுவாமியை வழிபாடு செய்தனர். பின், வீட்டிற்கு வந்து சுவாமிக்கு படையலிட்டு விரதத்தை முடித்தனர். கைகளில் நோன்பு கயிறுகளை கட்டிக் கொண்டனர். திருப்பாதிரிப்புலியூர் போடி செட்டித் தெரு திரவுபதியம்மன் கோவில், புதுப்பாளையம் கிராம தேவதை மாரியம்மன் உட்பட பல்வேறு பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் நோன்பு வழிபாடு நடந்தது.

