/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்று கட்சியினரை இணைப்பதில் தி.மு.க., அ.தி.மு.க., தீவிரம்: அனல் பறக்க துவங்கியது மாவட்ட தேர்தல் களம்
/
மாற்று கட்சியினரை இணைப்பதில் தி.மு.க., அ.தி.மு.க., தீவிரம்: அனல் பறக்க துவங்கியது மாவட்ட தேர்தல் களம்
மாற்று கட்சியினரை இணைப்பதில் தி.மு.க., அ.தி.மு.க., தீவிரம்: அனல் பறக்க துவங்கியது மாவட்ட தேர்தல் களம்
மாற்று கட்சியினரை இணைப்பதில் தி.மு.க., அ.தி.மு.க., தீவிரம்: அனல் பறக்க துவங்கியது மாவட்ட தேர்தல் களம்
UPDATED : டிச 08, 2025 06:07 AM
ADDED : டிச 08, 2025 06:05 AM

சிதம்பரம்: கடலுார் கிழக்கு மாவட்டத்தில், மாற்று கட்சியினரை இணைப்பதில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தீவிரம் காட்டி வருவதால், தேர்தல் களம் அனல் பறக்க துவங்கியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு மே மாதம் வர உள்ள நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 5 மாதங்களுக்கு முன்பே, மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை, மக்களை நேரடியாக சந்தித்து, திட்ட பணிகளில் கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து, தி.மு.க.,வினர் மக்கள் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
'ஆளும் கட்சிக்கு, நாங்களும் சளைத்தவர்கள்அல்ல' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்தோடு, மாநிலம் முழுவதும் பிரசாரத்தை துவங்கி, மக்களை நேரில் சந்தித்து வருகிறார்.
தங்கள் கட்சியினரையும், மக்களை நேரடியாக சந்தித்து அ.தி.மு.க., சாதனைகளை கூறி தேர்தல் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். அவர்களும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில், தி.மு.க., அ.தி.மு.க., வினர் தேர்தல் பணிகளில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக எஸ்.ஐ.ஆர்., பணியில், ஆரம்பத்தில் சுணக்கம் காட்டிய தி.மு.க.,வினர் சுழன்று சுழன்று பணியாற்ற துவங்கினர்.
அ.தி.மு.க., வினர் அப்பணியில் தொய்வு காட்டினாலும், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் போன்ற சில தொகுதிகளில் மட்டும் தீவீரம் காட்டி வந்தனர். இந்நிலையில், தேர்தலுக்கு முன்பே இரு கட்சியின் போட்டி துவங்கியுள்ளது.
நேற்று முன்தினம் காலை தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன் முன்னிலையில், கீரப்பாளையம் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த பா.ம.க., த.வெ.க., உள்ளிட்ட மாற்று கட்சியினர், 400 க்கும் மேற்பட்டோர் தி.மு.க., வில் இணைந்தனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அ.தி,மு.க, கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் முன்னிலையில், அதே தினத்தில், பரங்கிப்பேட்டை ஒன்றியம், குறியாமங்கலம் கிராமத்தில், மகேஸ்வரி தலைமையில் மாற்று கட்சியினர் 75 பேரும், நேற்று காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள அறந்தாங்கி பகுதியை சேர்ந்த 25 பேர், எட்வின் தலைமையில், மாற்று கட்சியில் இருந்து அ.தி.மு.க., வில் இணைந்தனர்.
அடுத்தடுத்து இரு கட்சியிலும் மாற்று கட்சியினரின் இணைப்பு விழா தொடரும் என கூறப்படுகிறது. தேர்தலுக்கு, 6 மாதத்திற்கு முன்பே, இரு கட்சியினர் போட்டா போட்டி துவங்கியுள்ளதால் தற்போதே தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

