/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.4.81 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் அதிரடி
/
ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.4.81 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் அதிரடி
ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.4.81 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் அதிரடி
ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.4.81 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் அதிரடி
ADDED : மார் 18, 2024 05:14 AM

சிறுபாக்கம், கடலுார் மாவட்டத்தில், உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ. 4.81 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
லோக்சபா தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. அதையடுத்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தேர்தல் கண்காணிப்பு குழுவினர், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திட்டக்குடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட விருத்தாசலம் - சேலம் சாலை, சிறுபாக்கம் அடுத்த அடரி கிராமத்தில் தாசில்தார் செந்தில்குமார் தலைமையிலான தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மதியம் 12:00 மணியளவில் சேலம் நோக்கி சென்ற லாரியை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்தவர் மாரி, 29, என்பவர், உரிய ஆவணங்களின்றி 2.51 லட்சம் ரூபாயை எடுத்து சென்றது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் கண்காணிப்பு குழுவினர், திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
சேத்தியாத்தோப்பு
புவனகிரி தொகுதி, அரசக்குழியில், தாசில்தார் செல்வக்குமார் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று மதியம் 1:00 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விருத்தாசலத்தில் இருந்து வடலுார் நோக்கி சென்ற காரை சோதனை செய்தபோது 1 லட்சம் ரூபாய் சிக்கியது. அந்த பணம் புவனகிரி தாலுகா அலுவலகத்தில் ஓப்படைக்கப்பட்டது.
சிதம்பரம்
காட்டுமன்னார்கோவில் பகுதியில் லோக்சபா தேர்தலையொட்டி, கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சோழதரத்தில், ஸ்ரீமுஷ்ணம் பி.டி.ஓ., ராமமூர்த்தி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மதுபாலன் தலைமையில் பறக்கும் படையினர் நேற்று மாலை 6:00 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருவாரூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், குப்புசாமி என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வந்த 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து, காட்டுமன்னார்கோவில் தாசில்தார் சிவகுமாரிடம் ஒப்படைத்தனர்.
கடலுார் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஒரே நாளில் 4லட்சத்து 81 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

