/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேர்தல் பணி மதிப்பூதியம் கிடைப்பது... எப்போது; ரூ. 5.12 கோடி ஒதுக்கியும் வழங்கவில்லை
/
தேர்தல் பணி மதிப்பூதியம் கிடைப்பது... எப்போது; ரூ. 5.12 கோடி ஒதுக்கியும் வழங்கவில்லை
தேர்தல் பணி மதிப்பூதியம் கிடைப்பது... எப்போது; ரூ. 5.12 கோடி ஒதுக்கியும் வழங்கவில்லை
தேர்தல் பணி மதிப்பூதியம் கிடைப்பது... எப்போது; ரூ. 5.12 கோடி ஒதுக்கியும் வழங்கவில்லை
ADDED : டிச 09, 2024 07:32 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலில் பணியாற்றிய அலுவலர்களுக்கு, விடுவிக்கப்பட்ட மதிப்பூதியம் இதுவரையில் வழங்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
கடந்த லோக்சபா தேர்தல், தமிழகத்தில் ஏப்., 19ல் நடந்தது. ஜூன் 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு, மத்தியில் புதிய ஆட்சி அமைந்து 6 மாதம் ஆகிறது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, ஓட்டுகள் எண்ணப்பட்ட நாள் வரை தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும். ஆனால், தேர்தல் முடிந்து, ஆறு மாதங்கள் ஆகியும், கடலுார் மாவட்டத்தில் பெரும்பாலான தொகுதிகளில் அலுவலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படாமல் உள்ளது.
தேர்தல் செலவினத்துக்கான தொகை, கடந்த அக்டோபர் மாதத்தில் விடுவிக்கப்பட்ட நிலையில், மதிப்பூதியம் விடுவிக்கப்படாமல் இருந்தது. தமிழக தலைமை தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட் நாயக் நியமிக்கப்பட்டதும், மதிப்பூதியம் வழங்காமல் இருப்பது அவரது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுத்த அவர், கடந்த மாதம் 13ம் தேதி அத்தொகை விடுவிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் எண்ணிக்கைக்கேற்ப சமர்ப்பிக்கப்பட்ட கேட்பு பட்டியல் சரிபார்க்கப்பட்டு, நிதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம், 171 கோடியே, 89 லட்சத்து, 11,407 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் பதவி மற்றும் பணியிடத்துக்கு ஏற்ப, 5,000 ரூபாய் முதல் 33,000 ரூபாய் வரை மதிப்பூதியம் வழங்கப்படும். இதில் கடலுார் மாவட்டத்திற்கு ரூ.5.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த தொகுதி தாலுகா அலுவலகங்ளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி விடுவிக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலான நிலையில் அலுவலர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது, பணி செய்தவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தேர்தலில் பணியாற்றிய அலுவலர் ஒருவர் கூறுகையில், அலுவலர்களுக்கான மதிப்பூதியம் கடலுார் மற்றும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற தொகுதியில் வழக்கமான பணிகளை காரணம் காட்டி தாமதப்படுத்துகின்றனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் கேட்பு பட்டியலில் உள்ள தொகையை அலுவலர்களுக்கு கொடுக்காமல், வேலை செய்த நாட்களை கணக்கிட்டு குறைவான தொகையை வழங்கினர்.
இதனால் அலுவலர்கள் அதிருப்தி அடைந்தனர். லோக்சபா தேர்தலில் வேலை பார்த்த அலுவலர்களுக்கு கேட்பு பட்டியலில் உள்ள தொகையை முழுமையாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.