/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சம்பா பருவ சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தம்! மேட்டூர் அணை நிரம்பியதால் ஆர்வம்
/
சம்பா பருவ சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தம்! மேட்டூர் அணை நிரம்பியதால் ஆர்வம்
சம்பா பருவ சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தம்! மேட்டூர் அணை நிரம்பியதால் ஆர்வம்
சம்பா பருவ சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தம்! மேட்டூர் அணை நிரம்பியதால் ஆர்வம்
ADDED : ஜூலை 31, 2024 04:21 AM

புதுச்சத்திரம் : மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால், பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், புதுச்சத்திரம் பகுதியில் சம்பா பருவ சாகுபடிக்கு, ஆயத்த பணிகளை விவசாயிகள் துவங்கியுள்ளனர்.
தமிழகத்தில் சம்பா பருவம் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் துவங்கி டிசம்பர், ஜனவரி மாதங்களில் முடிவடைகிறது. இந்த பருவத்திற்கு 130 நாட்கள் முதல் 150 நாட்கள் கொண்ட மத்திய ரகம் மற்றும் நீண்டகால நெல் பயிர்கள் ஏற்றதாகும்.
சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிப்பட்டு, சேந்திரக்கிள்ளை , பூவாலை, வயலாமூர், அலமேல்மங்காபுரம், பால்வாத்துண்ணான், மணிக்கொல்லை, தச்சக்காடு, அருண்மொழிதேவன், வல்லம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மானம் பார்த்தான் வாய்க்கால் மூலம், காவிரி நீரை பெற்று ஆண்டுதோறும் சம்பா பருவத்திற்கு நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக நாற்றாங்கள் அமைத்து நடவு செய்து வந்த இப்பகுதி விவசாயிகள், கடந்த சில ஆண்டுகளாக நேரடி நெல் விதைப்பு செய்து வருகின்றனர்.
வில்லியநல்லூர், புதுச்சத்திரம், சிலம்பிமங்கலம், அத்தியாநல்லூர், பஞ்சங்குப்பம், கொத்தட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் புஞ்சை நிலத்தில் மழை நீரை மட்டுமே நம்பி, ஆண்டுதோறும் சம்பா பருவத்தில் நேரடி நெல் விதைப்பு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு சம்பா பருவத்திற்கு நேரடி நெல் விதைப்பு செய்வதற்கு, இப்பகுதி விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். அதையொட்டி விவசாயிகள் தங்கள் நிலங்களில் செம்மறி ஆடுகளை கிடைக்கட்டியும், இயற்கை உரங்களான கால்நடை கழிவுகளை தெளித்து நிலத்தை மேம்படுத்துகின்றனர். தொடர்ந்து நிலங்களில் உள்ள மேடு,பள்ளங்களை மராமத்து செய்து சமப்படுத்தி, வரப்புகளை சீரமைத்து வருகின்றனர். மேலும் நேரடி நெல் விதைப்பு செய்வதற்கு ஏதுவாக வயல்களில் புழுதி உழவு செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள நிலங்களில், தற்போது புழுதி உழவு செய்யும் பணி நடந்து வருகிறது.
கடந்தாண்டு காவிரியில் போதுமான தண்ணீர் இல்லாததால், சூல் பருவத்தில் ஏராளமான வயல்கள் காய்ந்து, விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் இந்தாண்டு சம்பா சாகுபடி செய்யலாமா அல்லது உளுந்து பயிரிடலாமா என விவசாயிகள் ஆலோசித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, மேட்டூர் அணை நிரம்பியுள்ளது.
எனவே, இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு, பற்றாக்குறை இன்றி தண்ணீர் கிடைக்கும் நிலை உள்ளது.
இதனால் இப்பகுதி விவசாயிகள் உற்சாகமடைந்து, சம்பா பருவத்திற்கு நேரடி நெல் விதைப்பு செய்வதற்கு முன்கூட்டியே ஆயத்தமாகி வருகின்றனர்.