/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நீரின்றி கருகும் நெற்பயிர்கள் விவசாயிகள் கவலை
/
நீரின்றி கருகும் நெற்பயிர்கள் விவசாயிகள் கவலை
ADDED : செப் 30, 2024 06:13 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே நீரின்றி நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பெண்ணாடம் அடுத்த எடையூர், கோவிலுார், தாழநல்லுார், வடகரை, நந்திமங்கலம், கோனுார் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா பருவத்திற்கு நேரடி நெல் விதைப்பு மூலமாக, விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன், தென் மேற்கு பருவ மழையை நம்பி சாகுபடி செய்தனர்.
தற்போது மழையின்றி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கோவிலுார், எடையூர், நரசிங்கமங்கலம் ஆகிய கிராமங்களில் சாகுபடி செய்துள்ள 100 ஏக்கர் பரப்பில் நீரின்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து எடையூர் கிராம விவசாயிகள் கூறுகையில், 'ஆடி மாதம் மழை பெய்ததால், ஆவணியில் மழை வரும் என்ற நம்பிக்கையில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டோம். ஆனால் புரட்டாசி மாதம் பிறந்தும் இதுவரை மழை பெய்யவில்லை. இதனால் நீரின்றி இளம் நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இனியும் மழை வரவில்லை என்றால் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகத்தான் மாறும்' என்றனர்.