/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மக்காச்சோள பயிர்கள் பாதிப்பு விவசாயிகள் வேதனை
/
மக்காச்சோள பயிர்கள் பாதிப்பு விவசாயிகள் வேதனை
ADDED : டிச 27, 2024 06:28 AM

வேப்பூர்: மங்களூர் ஒன்றியத்தில் 66 ஊராட்சிகள் உள்ளன. இங்கு மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, வரகு பயிர்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில், புயல் மற்றும் தொடர் மழை காரணமாக சாகுபடி செய்த மக்காச்சோளம் பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் மழையால் பாதித்த பயிர்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கீடு செய்தனர். இதனால், மக்காச்சோளம் பயிர்களை அறுவடை செய்யவில்லை. இந்நிலையில், மழை மற்றும் பனியில் ஈரப்பதத்தால், மக்காச்சோளத்தில் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், சாகுபடி செய்த மக்காச்சோளம் முழுவதும் நஷ்டமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
எனவே, மங்களூர் ஒன்றியத்தில் மறு ஆய்வு செய்து மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.