/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிலத்தை சீரமைக்க ரொக்கமாக வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்: ஆற்றங்கரை ஓர வயல்கள் மண்மேடாகி பெரும் பாதிப்பு
/
நிலத்தை சீரமைக்க ரொக்கமாக வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்: ஆற்றங்கரை ஓர வயல்கள் மண்மேடாகி பெரும் பாதிப்பு
நிலத்தை சீரமைக்க ரொக்கமாக வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்: ஆற்றங்கரை ஓர வயல்கள் மண்மேடாகி பெரும் பாதிப்பு
நிலத்தை சீரமைக்க ரொக்கமாக வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்: ஆற்றங்கரை ஓர வயல்கள் மண்மேடாகி பெரும் பாதிப்பு
ADDED : டிச 20, 2024 04:22 AM
கடலுார்: கடலுார் பகுதியில் பெஞ்சல் புயல்காரணமாக தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மண் அரிப்பு, மண் மேடுகளால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை சீரமைக்க அரசு ரொக்கமாக வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
வங்கக்கடலில் கடந்த 25ம் தேதி உருவான பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே 30ம் தேதி கரையை கடந்தது.
இதன்காரணமாக புதுச்சேரியில் 50 செ.மீ., அதி கனமழையும், கடலுாரில் 25 செ.மீ., மழையும் வெளுத்து வாங்கியது.
அத்துடன் புயல் கடந்த பாதை முழுவதும் கனமழை கொட்டியது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது.
தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சாத்தனுார் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணையின் பாதுகாப்பு கருதி சாத்தனுார் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்த வெள்ள நீருடன் ஆங்காங்கே கிராமங்களில் வடியும் மழைநீரும் சேர்ந்து பெண்ணையாற்றில் 2.40 லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்தது.
இதனால் வெள்ளம் இரு கரைதொட்டு ஓசையுடன் ஆர்ப்பரித்து சென்றது.
இதனால் கடலுார் பகுதியில் பெண்ணையாற்றின் கரையை ஒட்டிய கிராமங்களான உப்பலவாடி, நாணமேடு, கண்டக்காடு, உச்சிமேடு, சுபாஉப்பலவாடி, தாழங்குடா போன்ற கிராமங்களில் தண்ணீர பெருக்கெடுத்து ஓடியது.
கிராமங்களில் உட்புகும் உபரி நீரை வங்கக்கடலில் வடிய வைக்க சுபா உப்பலவாடி, புதுச்சேரி மாநிலம் புதுக்குப்பம், தேவனாம்பட்டினம் ஆகிய முகத்துவாரங்கள் வழியாக தண்ணீர் வடியவிடப்பட்டது.
இதனால் தண்ணீர் வேகமாக கடலில் கலக்கும்போது பல இடங்களில் விளைநிலங்களில் ஒரு அடிக்குமேல் மண்மேடுகளை விட்டுள்ளது.
சில பகுதிகளில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இன்னும் சில இடங்களில் பயிர்கள் நாசமாகியுள்ளன.
மண் மேடிட்டுள்ள பகுதிகளில் உடனடியாக சாகுபடி செய்தால், பயிர் செழித்து வளராது. அதனால் மேல் மண்ணை அகற்றினால்தான் எப்போதும் போல் பயிர் செய்ய முடியும்.
இல்லையென்றால் மண்மேடிட்ட நிலத்தில் செழிப்பான மண்ணாக மாற்ற வேண்டும். இதற்காக அரசு வேளாண்மை துறை சார்பில் தரும் வாகனங்களினால் இதை முழுவதுமாக சரி செய்ய இயலாது.
எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலத்தை சீரமைக்க ரொக்கமாக வழங்கினால் சிறப்பாக இருக்கும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசு வழங்கும் மானியங்கள் யாகவும் ரொக்கமாக வழங்குபதுபோல் நிவாரணத்தொகையும் ரொக்கமாக வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.