/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உழவர் நல சேவை மையம் விண்ணப்பிக்க அழைப்பு
/
உழவர் நல சேவை மையம் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 05, 2025 03:15 AM
கடலுார்: வேளாண் பட்டதாரிகள் அல்லது வேளாண் பட்டயப்படிப்பை முடித்தவர்கள் 30 சதவீத மானியத்துடன் உழவர் நல சேவை மையம் அமைக்கலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறினார்.
அவரது செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில் 15 உழவர் நல சேவை மையங்கள் அமைக்க இலக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய பட்டதாரி, டிப்ளமோ முடித்தவர்கள் உழவர் நல சேவை மையம் அமைக்க முன்வரலாம்.
இத்திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாயில் தொழில் தொடங்கினால் 3 லட்சம் மானியம் அல்லது 20 லட்சத்தில் தொழில் தொடங்கினால் 6 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
இந்த மையங்களில் விதைகள், உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்யலாம்.
நவீன தொழில்நுட்பம், விளைபொருட்களை மதிப்புக் கூட்டுதல், வேளாண் இயந்திர வாடகை மையம், ட்ரோன், சேவை வேளாண் இயந்திரம் பழுது பார்க்கும் பட்டறை போன்ற அனைத்து சேவைகளும் வழங்கப்படும்.
இம்மையம் மூலம் விவசாயிகள் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெற முடியும். பங்கேற்பாளர்களுக்கு வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சி அளிக்கப் படும். 45 வயதுக்குட்பட்டோர் வங்கியில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
கடன் ஒப்புதல் பெற www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணையதள முகவரியில் ஆவணங்களைச் சமர்ப்பித்து மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.