/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள்.... ஆவேசம்; வாய்க்கால்களை துார் வார கோரிக்கை
/
குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள்.... ஆவேசம்; வாய்க்கால்களை துார் வார கோரிக்கை
குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள்.... ஆவேசம்; வாய்க்கால்களை துார் வார கோரிக்கை
குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள்.... ஆவேசம்; வாய்க்கால்களை துார் வார கோரிக்கை
ADDED : செப் 27, 2025 01:53 AM

கடலுார்: மழைக்காலம் துவங்கும் நிலையில், மாவட்டத்தில், இதுவரை தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் எதுவும் துார்வாரவில்லை என விவசாயிகள் கூறினர்.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். (பயிற்சி) கலெக்டர் மாலதி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் விவசாயிகள் பே சியது பின்வருமாறு:
மாதவன்: கடலுார் மாவட்டத்தில் கடுமையாக யூரியா தட்டுப்பாடு உள்ளது. இதனால் விவசாயிகள் யூரியா பயன்படுத்தாத நிலை உள்ளது. விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி யூரியா கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையால் சேதமடைகிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலுார் டவுன்ஹால் புதுப்பிக்கப்பட்ட பின்பு வாடகை அதிகளவில் உள்ளது. வாடகையை குறைக்க வேண்டும்
விஜயகுமார்: விசூர் பகுதியில் ஓடையில் இருந்து செல்லும் வடிகால் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதுவரை துார்வாரும் பணியை துவங்கவில்லை. மழைக்காலம் நெருங்கிவிட்டது. கடந்த சில நாட்கள் முன்பு பெய்த மழையில் மழைநீர் செல்ல வழியின்றி விளை நிலங்களில் தேங்கியது.
இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பல இடங்களில் வாய்க்கால்கள் துார்வாராமல் கிடக்கிறது. இதே கோரிக்கையை மற்ற விவசாயிகளும் வலியுறுத்தி பேசினர்.
கலியபெருமாள்:
காய்கறி பயிர் செய்யும் விவசாயிகளுக்கு எலக்ட்ரிக் வாகனம் மானியத்தில் வழங்க வேண்டும். விஜயமாநகரத்தில் சேதமடைந்த சமுதாயகூடத்தை சீரமைக்க வேண்டும். 70 வயது கடந்த விவசாயிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் இன்ஸ்சூரன்ஸ் வழங்க வேண்டும்.
குமரகுரு: குறிஞ்சிப்பாடி, கருப்பன்சாவடி கிராமத்தில் உலர் களம் அமைக்க வேண்டும். செங்கால் ஓடையில் என்.எல்.சி., அடிக்கடி தண்ணீர் திறந்து விடுகிறது. அதனால் செங்கால் ஓடையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவீந்திரன்: தண்ணீரை சுத்திகரிக்கும் தன்மை கொண்ட வெட்டிவேரில் நன்மைகள் நிறைந்துள்ளது. சாகுபடியை ஊக்குவிக்க வீடு வீடாக சென்று வெட்டிவேர் செடி வழங்க வேண்டும். அதன் மூலம் வெட்டிவேர் பரப்பு அதிகரிப்பதுடன் கழிவுநீரையும் சுத்திகரிக்க முடியும்.
முருகானந்தம்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழியர் பற்றாக்குறையை சரி செய்வதோடு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களையும் திறக்க வேண்டும்.
பத்திரப்பதிவுத்துறையில் வழிகாட்டு மதிப்பீடு விலையைவிட கூடுதல் தொகைக்கான 30 சதவீதம் அளவிற்கு பத்திரம் மற்றும் பதிவிற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எனவே வழிகாட்டு மதிப்பை இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கானுார் பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேசுகையில், 'விவசாயிகளின் கோரிக்கைகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.