/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொள்ளிடக்கரை கிராமங்களில் முதலைகளால்... அச்சம்; நீர் நிலைகள் வற்றுவதால் வெளியேறுகிறது
/
கொள்ளிடக்கரை கிராமங்களில் முதலைகளால்... அச்சம்; நீர் நிலைகள் வற்றுவதால் வெளியேறுகிறது
கொள்ளிடக்கரை கிராமங்களில் முதலைகளால்... அச்சம்; நீர் நிலைகள் வற்றுவதால் வெளியேறுகிறது
கொள்ளிடக்கரை கிராமங்களில் முதலைகளால்... அச்சம்; நீர் நிலைகள் வற்றுவதால் வெளியேறுகிறது
ADDED : மார் 27, 2024 07:19 AM

சிதம்பரம் : சிதம்பரம் பகுதியில் மூன்று இடங்களில் அடுத்தடுத்து முதலைகள் பிடிபட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக கோடை தாக்கத்தால், நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு வருவதால், முதலைகள் கிராமங்களுக்குள் புகுந்து வருகிறது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் கொள்ளிடக்கரை மற்றும் பழைய கொள்ளிடம் ஆற்று பகுதியில் தஞ்சமடைந்த நுாற்றுக்கணக்கான முதலைகள், அவ்வப்போது கிராம பகுதிகளில் புகுந்து விடுவதால் பொதுமக்கள் பீதியைடைந்து வருகின்றனர்.
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் வனத்துறையினர் பிடிக்கும் முதலைகள், சிதம்பரம் அடுத்துள்ள வக்காரமாரி குளத்தில், விடப்படுகிறது. கோடையில் நீர் வற்றியதும் அங்கிருந்த முதலைகள் மீண்டும் வெளியேறி கிராமங்களுக்குள் புகுந்து விடுகிறது.
இதனால், சிதம்பரம் பகுதியில் பிடிபடும் முதலைகளை, பாதுகாக்க முதலை பண்ணை அமைக்க வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, எம்.எல்.ஏ., பாண்டியன் முதலை பாதிப்பு குறித்து சட்டசபையில் பேசி, முதலை பண்ணை அமைக்க கோரிக்கை விடுத்தார். தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால், மீண்டும் முதலைகள் அச்சம் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை 6 முறை முதலைகள் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் கொள்ளிடக்கரை கிராமங்களில் பிடிபட்டுள்ளது. அதிலும் 3 முறை வீடுகளின் உள்ளேயே புகுந்தது.
அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு 12:30 மணியளவில், சிதம்பரம் அடுத்த மேல்தவர்தாம்பட்டு கிராமத்தில் உள்ள செல்வகுமார் என்பவரது வீட்டில், சுமார் 8 அடி நீளம், 120 கிலோ எடையுள்ள முதலை புகுந்தது. வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாவட்ட வன அலுவலர் குருசாமி தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று முதலையை பிடித்தனர்.
அதே நாள் நள்ளிரவு 1:30 மணியளவில் கண்ணங்குடி, மெயின்ரோட்டில், குளம் அருகே 6 அடி நீளம், 50 கிலோ எடையுள்ள முதலையை அடுத்ததாக பிடித்தனர். நேற்று பகல் 1:30 மணியளவில் கீழ் அனுவம்பட்டு கிராம குளத்தில் 3 அடி நீள முதலை பிடிபட்டது.
பிடிபட்ட 3 முதலைகளும், வழக்கம் போல் வக்காரமாரி குளத்தில் விடப்பட்டது.
கடந்த காலங்களில் மே மாத கோடையில்தான் முதலைகள் வெளியேறும், தற்போது பிப்ரவரி மாதம் முதல் கோடை துவங்கியதால் நீர் நிலைகள் வரண்டு போனது. இதனால் மார்ச் மாத்திலிருந்தே முதலைகள் வெளியேற்றம் துவங்கிவிட்டது. எனவே, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் கொள்ளிடக்கரை கிராமங்களில் முதலை அச்சத்தை போக்க, முதலை பண்ணை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

